வரலட்சுமி சரத்குமாருக்கு நடந்த கொடுமை!

பிரபல டிவி சேனலின் நிகழ்ச்சி தயாரிப்பு தலைவர் ஒருவர் தன்னிடம் அசிங்கமாக நடந்து கொண்டதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்ட அதிர்ச்சி அடங்கும் முன்பு சீனியர் நடிகரான சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி திடுக்கிடும் தகவலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது,

இதை வெளியே சொல்வதா வேண்டாமா என்று இரண்டு நாட்களாக யோசித்து இதை எழுதுகிறேன்.

முன்னணி டிவி சேனலின் நிகழ்ச்சி தயாரிப்பு தலைவரை சந்தித்தேன். அரை மணிநேர சந்திப்பு முடிந்தவுடன் வெளியே எப்பொழுது சந்திக்கலாம் என்று கேட்டார். ஏதாவது வேலையா என்று நான் கேட்டதற்கு ஒரு மாதிரியாக சிரித்துவிட்டு வேலை இல்லை வேறு விஷயங்களுக்கு என்றார். என் அதிர்ச்சியையும், கோபத்தையும் மறைத்துக் கொண்டே அவரை கிளம்புமாறு கூறினேன். அவ்வளவு தானா என்று கேட்டு சிரித்துவிட்டு சென்றார்.

இதை கேட்கும் அனைவரும் சினிமா துறை இப்படித் தான். நீங்கள் நடிக்க வரும்போதே தெரிந்திருக்க வேண்டும். தற்போது புகார் தெரிவித்து என்ன செய்ய என்பார்கள். பெண்களை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள நான் இந்த துறைக்கு வரவில்லை. எனக்கு நடிப்பு பிடிக்கும். அது நான் தேர்வு செய்த வேலை.

நான் ஒரு நடிகை. திரையில் கிளாமராக வருவதால் நேரில் மரியாதையில்லாமல் பேசுவது சரி அல்ல. இது என் வாழ்க்கை, என் உடல், என் விருப்பம்.

என்னிடம் தவறாக நடந்தவர் யார் என்று கேட்டால் அதை தெரிவிக்க இது உகந்த இடமோ, நேரமோ இல்லை என்பேன். மேலும் அதை தெரிவித்தால் பிரச்சனை திசை திரும்பிவிடும்.

பெண்கள் என்ன அணிய வேண்டும், எப்படி பேச வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுவதை விட்டுவிட்டு ஆணுறுப்பை வைத்து சிந்திப்பதை நிறுத்த வேண்டும் என்று ஆண்களுக்கு சொல்ல வேண்டும்.

பெண்களை ஒழுங்காக நடத்த வேண்டும் என்பதை ஆண்களுக்கு வீட்டில் சொல்லிக் கொடுக்க வேண்டும். பலாத்காரம், மானபங்கம் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பயத்தால் பேசாமல் இருக்கும் அனைத்து பெண்களுக்காகவும் பேசுகிறேன்.

நாம் தற்போது செயல்படாவிட்டால் பெண்களின் பாதுகாப்பு வெறும் கனவாகிவிடும். அதன் பிறகு நம் சமூகத்தில் இருந்து பலாத்காரம் என்ற வார்த்தையை அகற்ற முடியாது. நான் அமைதியாக இருக்க மாட்டேன்.

பிற சகோதரிகளும் பேசுமாறு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் தனியாக இல்லை என தெரிவித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

Related Posts