வயோதிபத் தம்பதியர் மிரட்டப்பட்டனர்: விளக்கீட்டுக்காக ஏற்றப்பட்ட விளக்குகளும் உடைப்பு!

கார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் கார்த்திகை விளக்கீட்டுக்காக தீபம் ஏற்றிய வயோதிபத் தம்பதியர் இருவர் இராணுவத்தினரால் மிரட்டப்பட்டு விளக்குகளும் தூக்கி வீசப்பட்டதாக சம்மந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

வழமைபோல் கார்த்திகை விளக்கீட்டிற்காக விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. வீட்டு முற்றத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்த நிலையில் வீட்டு வளவின் உள்ளே வந்த இராணுவத்தினர் விளக்குகளைத் தூக்கி வீசியுள்ளனர்.

அதன்பின்னர், வயோதிபரை துப்பாக்கியால் தாக்க வந்தததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார். பரந்தன் இராணுவ முகாமைச் சேர்ந்தவர்களே இராணுவ சீருடையில் இவ்வாறு அச்சுறுத்தியதுடன் தாக்க முற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, நேற்று முன்தினம் பரந்தன் பகுதியில் குறித்த இராணுவத்தினரே ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியதுடன் ஒளிப்பதிவு செய்த காட்சிகளை அழித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts