புங்குடுதீவில் நெல்வயல்களுக்குப் பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்காக வடக்கு விவசாய அமைச்சு முட்கம்பிச் சுருள்களை வழங்கியுள்ளது. வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் புங்குடுதீவு கமநல சேவைகள் திணைக்கள அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (24.12.2015) விவசாயிகளைச் சந்தித்து முட்கம்பிச் சுருள்களை வழங்கி வைத்துள்ளார்.
புங்குடுதீவில் கட்டாக்காலி மாடுகளால் நெற்செய்கை பாதிக்கப்படுவது விவசாய சம்மேளனங்களால் வடக்கு விவசாய அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இதையடுத்தே புங்குடுதீவு கிழக்கு, பெருங்காடு தெற்கு, வல்வன், மடத்துவெளி ஆகிய பகுதிகளில் நெற்செய்கையை மேற்கொள்ளும் 37 விவசாயிகளுக்கு முட்கம்பிச் சுருள்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வழங்கி வைக்கப்பட்ட 2750 கிலோ முட்கம்பிச் சுருள்களின் மூலம் 4000 ஏக்கர் பரப்பளவு வயல்களுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முட்கம்பிச் சுருள்களை வழங்கிவைக்கும் நிகழ்ச்சியில் மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
புங்குடுதீவில் நெற்செய்கையை மேற்கொள்ளும் பொருட்டு வடக்கு விவசாய அமைச்சின் 4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இடம்பெற்ற பெரிய கிராய்க்குளப் புனரமைப்புப் பணிகள் முடிவடையும் நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.