வன்முறைகளை தொடர்பில் முறையிடுவதற்கு அவசர தொலைபேசி எண்

Call-telephoneவன்முறைகள், துஷ்பிரயோகங்கள் மற்றும் மதுபாவனை போன்ற உளசமூக பிரச்சினைகளினால் ஒருவர் உடல், உள ரீதியாகப் பாதிக்கப்பட்டு, அதீத நெருக்கடிகளுக்கு ஆளாகின்ற போது அது தொடர்பில் முறையீடு செய்வதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்றினை யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அறிமுகப்படுத்தியுள்ளது.

யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் செவ்வாய்க்கிழமை (05) அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

0212 226 666 என்ற இந்தத் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பொருத்தமான உதவிகளை, வழிகாட்டல்களை ஒருவர் பெற்றுக்கொள்ளலாம்.
வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் மற்றும் மதுபாவனை போன்ற உளசமூக பிரச்சினைகளின் போது என்ன செய்யலாம், மனக்குழப்பத்திலிருந்து எவ்வாறு மீளலாம், யாரிடம் ஆதரவு உதவி கேட்கலாம் போன்ற வழிவகைகள் தெரியாது பிரச்சினையில் அவதியுறுவர்.

இவ்வேளைகளில் பொருத்தமான ஆதரவினை வழங்கவும், அந்நேர மனக்குழப்பத்தில் இருந்து ஆறுதல் அடையவும், பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கான பொருத்தமான வழிகாட்டல்களை வழங்கவும் மேற்குறிப்பிட்ட அவசர அழைப்பு எண்ணுடன் தொடர்புகொண்டு உதவிகளை, வழிகாட்டல்களை ஒருவர் பெற்றுக்கொள்ளலாம்.

இச்சேவை யாழ்ப்பாண மாவட்டத்தில் வாரத்தின் ஏழு நாட்களுக்கு 24 மணித்தியாலமும் நடைமுறையில் இருக்கும்.

பயிற்சி பெற்ற பணியாளர்கள் இந்த மனிதநேயகரமான செயற்பணியில் ஈடுபடுகின்றனர். அவசர அழைப்பெண் (நேயம்) சேவையை பெறுவோரின் தொடர்பாடல் உளசமூக, நீதிநெறிக் கோவைக்கு அமைவாக மிக இரகசியமாகப் பேணப்படும்.

ஆயினும் சேவை தொடர்பான உயர்தரத்தைப் பேணுவதற்காகத் தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டு, அவை அந்தரங்கமாகப் பேணப்படும். இது எமது சுகாதார சேவையின் காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் மேலும் ஒரு சேவை விரிவாக்கம் ஆகும்.

குடும்ப பெண் வன்முறைகள், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள், மதுபாவனைகள், உளநலம் சார்பான பிரச்சினைகள் போன்றவற்றில் சிக்கி அவதியுருவோருக்கு அதிலிருந்து விடுபடுவதற்கு உதவும் ஒரு நேயமான பணியாகும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Posts