வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றவரின் நாக்கை கடித்து துப்பிய மாணவி

பாடசாலை முடிந்து தனியாக வீடு திரும்பிக்கொண்டிருந்த 18 வயது மாணவியொருவரை வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற பஸ் சாரதியொருவருக்கு, வாழ்க்கையில் மறக்க முடியாத தண்டனையொன்றை குறித்த மாணவி வழங்கிய சம்பவமொன்று அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மேற்படி மாணவி, பாடசாலை முடிந்து தனிமையில் வந்துகொண்டிருந்த போது, மேற்படி சாரதியும் மோட்டார் சைக்கிளொன்றில் வந்து குறுக்கு வீதியொன்றுக்கு அருகில் வைத்து மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.

இதன்போது, குறித்த மாணவி அந்நபர் மீது குடையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இருப்பினும், அந்நபர் தனது முயற்சியை கைவிடாது, மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றுள்ளார். அவரிடமிருந்த தப்பிக்க முயன்ற மாணவி, சாரதியின் நாக்கை கடித்து துப்பிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்போது, சந்தேகநபர் பயணித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத்தையும் குறித்த மாணவி, பொலிஸாருக்கு வழங்கியதை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், அக்குரஸ்ஸ, ஹேனகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அக்குரஸ்ஸ பொலிஸார் கூறினர்.

Related Posts