வன்னிப் பிரதேசங்களில் கடமையாற்றுகின்ற பல ஆசிரியர்கள் அங்குள்ள விடுதிகளில் தங்கியிருந்து தமது அர்ப்பணிப்பான சேவையைச் செய்து வருகின்றனர். அதிலும் அனேக ஆசிரியர்கள் பெண்களாகும்.
இவர்கள் தங்கியுள்ள விடுதிகள் இரவு நேரங்களில் தட்டப்பட்டு அங்குள்ள ஆசிரியர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். இத்தகைய சம்பவம் முழங்காவில் மகாவித்தியாலயத்தில் தங்கியிருந்த பெண் ஆசிரியர்களின் விடுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த விடுதிக்கு அருகில் இராணுவ முகாம் அமைந்திருப்பதாகவும் இராணுவத்தினரே இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது.
வன்னிப் பிரதேசம் தவிர்ந்த வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பல ஆசிரியர்கள் தமது குழந்தைகளையும், உறவுகளையும் விட்டுவிட்டு விடுதிகளில் தங்கியிருந்து தமது சேவையை ஆற்றிவரும் நிலையில் இத்தகைய சம்பவங்கள் அவ்வாசிரியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்தி,ஆசிரியர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்குமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வடமாகாணக் கல்வி அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் சங்கத்தின் பொதுச் செயலாளர் கல்வி அமைச்சு செயலாளரிடமும் முறையிட்டுள்ளார்.