போலி விசாவை பயன்படுத்தி இத்தாலி ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட இரண்டு இளைஞர்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைதுசெய்துள்ளனர்.
நேற்று அதிகாலை வேளையில் இவர்கள் இருவரையும் கைது செய்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 31 மற்றும் 28 வயதுகளையுடைய இருவர் ஓமான் விமான சேவைக்கு சொந்தமான டப்ளியூ. வை.372 என்ற விமானத்தில் இத்தாலி ஊடாக பிரான்ஸுக்கு செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றுள்ளனர்.
இதன்போது, அவ்விருவரும் ஜேர்மனி தூதரக அதிகாரி ஒருவரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போதே குறித்த அதிகாரி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அளித்த தகவலின் பிரகாரம் இருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளில் இரண்டு இளைஞர்களும் உண்மையான கடவுச் சீட்டுக்களையே வெளிநாடு செல்ல பயன்படுத்தியுள்ள போதும், பிரான்ஸுக்குள் நுழைவதற்கான விசாவானது போலியானது என்பதும் தெரியவந்துள்ளது.
அத்துடன் கைதான இருவரினதும், பிரான்ஸில் வசிக்கும் உறவினர்கள் யாழில் உள்ள வெளிநாட்டு முகவர் ஒருவருக்கு வழங்கிய பணத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு போலி விசாக்களில் அவ்விரு இளைஞர்களும் அனுப்பப்பட்டுள்ளதும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டுள்ளனர்.