இறுதிக்கட்டப் போரில் பொதுமக்களால் கைவிடப்பட்ட வாகனங்கள் உட்பட சகல வாகனங்களும் இராணுவத்தினரால் ஏலவிற்பனை மூலம் விற்கப்பட்டு வருகின்றன என்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நல்லூர் பிரதேச செயலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.
இறுதிக்கட்டப் போரில், முல்லைத்தீவில் பொதுமக்களாலும், அரச திணைக்களங்களாலும் கைவிடப்பட்ட வாகனங்களைச் சட்டவிரோதமாகக் கொண்டுவந்து ஏழாலைப் பிரதேசத்தில் வைத்து இரும்பாக்கித் தென்பகுதிக்கு ஏற்றுமதி செய்வதாக இந்தக் கூட்டத்தில் வலி. வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோ.சுகிர்தன் குற்றஞ்சாட்டினார்.
இதற்குப் பதிலளித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், ஏழாலைப் பிரதேசத்தில் மேற்படி வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் இராணுவத்தினரால் ஏலத்தில் விற்பனை செய்த பொருள்களையே, கொண்டுவந்து இரும்பாக்கி விற்பனை செய்கின்றனர். என்று பதிலளித்தார்.
இறுதிக்கட்டப் போரில் கைவிடப்பட்ட அரச வாகனங்களை மீண்டும் அந்தத் திணைக்களத்திடமே இராணுவம் மீள ஒப்படைத்திருக்க வேண்டும் என்று சுகிர்தன் அங்கு தெரிவிக்க, அவை அரச சொத்து என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று பதிலளித்தார் எரிக்பெரேரா.
சுகாதாரத் திணைக்களத்துக்குச் சொந்தமான, 2006 ஆம் ஆண்டு பதிவு செய்த EP LW-0189 என்ற இலக்கமுடைய வாகனம் ஏழாலைப் பிரதேசத்தில் வியாபாரம் செய்பவர்களால் அங்கு வைக்கப்பட்டுள்ளது.
நாம் மேற்படி சட்டவிரோத இரும்பு விற்பனை தொடர்பாகத் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து எமது பிரதேச எல்லைக்குள் இருந்த வாகனங்களை எல்லாம் அப்புறப்படுத்திச் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிக்குள் கொண்டு சென்றுள்ளனர் என்று சுகிர்தன் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து எரிக் பெரேரா, இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்கின்றேன். ஏழாலையில் உள்ள குறித்த விற்பனை நிலையம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இதேவேளை முல்லைத்தீவில் ஏலவிற்பனையில் கொள்வனவு செய்யும் வாகனங்களை, இங்கு கொண்டுவருவது ஏன்? நேரடியாக அங்கிருந்து தென்பகுதிக்குக் கொண்டுசெல்ல வேண்டியதுதானே.
இங்கு கொண்டுவந்து தென்பகுதிக்கு அவற்றை ஏற்றுவதால், யாழ்ப்பாணத்தில் திருட்டுப் போகும் வாகனங்களும் இவ்வாறு கொண்டு செல்லப்படலாம் என்று பிரதேச சபைத் தலைவர் சுகிர்தன் மேலும் கூறினார்.