வன்னிப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கென முன்மாதிரியாக அவர்களைத் தொழில் முனைவோர்களாகக் கொண்டு பயணிகள் ஓய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்குவதற்கு உதவி வழங்கும் நிறுவனங்கள் செலவிட்டுள்ள பணத்தில் ஒரு டொலரேனும் வீண் போகாது. வன்னிப் பெண்கள் சாமானியர்கள் அல்லர். அவர்கள் மீளவும் சாதித்துக் காட்டுவார்கள் என்று அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
பெண்களைப் பங்குதாரர்களாகக் கொண்ட வன்னிவள சுய அபிவிருத்தி நிறுவனம் மாங்குளம், கண்டி வீதியில் கைப்பணிப் பொருட்களின் காட்சியறை மற்றும் பாரம்பரிய உணவகத்துடன் கூடிய பயணிகள் ஓய்வகம் ஒன்றை உருவாக்கியுள்ளது. யு.எஸ்.எய்ட் மற்றும் எஸ்.டி.சி நிறுவனங்களின் நிதிப்பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட இப்பயணிகள் ஓய்வகம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (22.06.2015) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனைத் திறந்து வைத்து உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
வன்னி மண் யாருக்கும் இலகுவில் அடிபணியாது. பண்டாரவன்னியனின் படைகள் மன்னாரில் இருந்து மாங்குளம் ஊடாக முன்னேறிய ஆங்கிலேயப் படைகளை பதினெட்டுத் தடவைகள் முறியடித்ததாக வரலாற்றில் இருந்து அறிய முடிகிறது. இப்போது நடந்து முடிந்த போரிலும் இலங்கை அரசு இலகுவில் வெற்றி பெறவில்லை. எத்தனையோ தடவைகள் படையெடுப்புகளை நடாத்தியிருக்கிறது. அதனை எதிர் கொண்டதில் வன்னிப் பெண்களின் தீரமும் தியாகமும் பெருமளவுக்கு இருக்கிறது.
கடின உழைப்பாளிகளான இந்த வன்னிப் பெண்களே போரினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளார்கள். தொழில் வாய்ப்பு இல்லாதவர்களாகவும், அங்கவீனர்களாகவும், குடும்பத் தலைவர்களை இழந்தவர்களாகவும், பாதுகாப்பு அற்றவர்களாகவும் இவர்கள் எதிர்நீச்சல் போடவேண்டியுள்ளது.
போருக்குப் பின்னர் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரச சார்பற்ற நிறுவனங்கள் ஏராளமான உதவிகளை வழங்கியபோதும் பெண்களின் வாழ்க்கைத்தரம் பெருமளவுக்கு முன்னேறவில்லை. பெரும்பாலான உதவிகள் மீனைப் பிடிப்பதற்குக் கற்றுக் கொடுப்பதற்குப் பதிலாகச் சாப்பிடுவதற்கு மீனைக் கொடுப்பது போல் இருந்ததே இதற்கான காரணம் ஆகும்.
இப்போது, பெண்களைப் பங்குதாரர்களாகவும் தொழில் முனைவோராகவும் கொண்டு வன்னி வள சுயஅபிவிருத்தி நிறுவனம் உருவாக்கப்பட்டு, அவர்களின் தொழில் முயற்சியொன்றுக்கு உதவி வழங்கும் நிறுவனங்கள் நிதிப்பங்களிப்புச் செய்துள்ளன. ஏறத்தாழ 13 மில்லியன் ரூபா செலவில் இந்தப் பயணிகள் தங்ககம், மிகப் பொருத்தமான ஒரு இடத்தில் கண்டி வீதியில் அமைக்கப்பட்டுள்ளது. வன்னியின் சுவையைப் பறைசாற்றும் உணவகமும் அமைய இருப்பதால் பொருளாதார ரீதியான வெற்றியை இந்த உணவகம் எமது பெண்களுக்குப் பெற்றுத்தரும். இதனை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு ஏனைய மாதர் அமைப்புகளும் உதவிகளை மற்றவர்களிடம் இருந்து தொடர்ந்து பெற்றுக்கொண்டிருப்பவர்களாக இல்லாது தொழில் முனைவோராகவும் தொழில் வழங்குநர்களாகவும் மாற்றம் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் யு.எஸ்.எய்ட் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் மான் வோங், எஸ்.டி.சி நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் மார்ட்டின் ஸ்டுடர், எஸ்.ஏ.எச் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி டானியல் புரொன்கல், பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் சோ.கோகுலதாசன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.