ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செயிட் அல் ஹூசைன் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
டுபாயிலிருந்து வந்த ஈகே650 என்ற விமானத்தில் வந்த செய்ட் அல் ஹூசைனுடன் 6 பிரதிநிதிகளும் வருகை தந்தனர்.
நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள செயிட் அல் ஹூசைன் எதிர்வரும் 9 ஆம்திகதி வரை நாட்டில் தங்கியிருப்பதுடன் அரச தரப்பு, எதிர்த்தரப்பு, சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் வடமாகாணத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார்.
அத்துடன் இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ஐ.நா. மனித உரிமையாளர் செயிட் அல் ஹூசைன் அங்கு வடமாகாண முதலமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படும் உள்ளக விசாரணைப் பொறிமுறை செயற்பாட்டில் வடமாகாணத்தின் பங்களிப்பு முக்கியத்துவமிக்கதாக இருக்குமென கருதப்படுகின்ற நிலையிலேயே செயிட் அல் ஹூசைன் வடமாகாண முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றார்.
விசேடமாக விசாரணை பொறிமுறையின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் செயற்பாடு எவ்வாறு அமையும் என்பது குறித்து இதன் போது கலந்துரையாடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை இன்று மாலை கொழும்பு திரும்பவுள்ள செயிட் அல் ஹூசைன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்