வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக டெனிஸ்வரன் வழக்குத் தாக்கல்

தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு இலங்கையின் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்தை ரத்துச் செய்யக் கோரி, முன்னாள் மீன் பிடித்துறை அமைச்சர் பி.​டெனிஸ்வரன் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் பிரதிவாதிகளாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், அந்த மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாண ஆளுநர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி தனக்கு கடிதமொன்றை அனுப்பிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதாக அறிவித்தார் என்று மனுதாரர் பி.​டெனிஸ்வரன் கூறினார்.

பதவி நீக்குவதற்கு முன்னர் முதலமைச்சர் தனக்கு எதிராக எந்தவிதமான விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை என்று கூறிய மனுதாரர், அரசியல் சாசனத்தின்படி மாகாண அமைச்சர் ஒருவரை பதவி நீக்கும் அதிகாரம் மாகாண ஆளுநருக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எனவே தன்னை பதவி நீக்குவதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தீர்ப்பளிக்குமாறு நீதிமன்றத்தில் கோரியுள்ள மனுதாரர், முதலமைச்சரின் தீர்மானத்தை ரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த மனு தொடர்பான கருத்துக்களை ஆராய்ந்த மேல் முறையீட்டு நீதிமன்றம், இது தொடர்பான தீர்ப்பு அக்டோபர் மாதம் 3-ம் திகதி அறிவிக்கப்படுமென்று கூறியுள்ளது.

Related Posts