வட மாகாண முதலமைச்சர் தமிழ் மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டுகிறார் ; ஜே.வி.பி

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி வருவதாக ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல்ரத்நாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.

வடமாகாண முதலமைச்சராக பதவி வகிக்கும் விக்னேஸ்வரன், இதுவரை தனது முதலமைச்சர் பதவியை பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்றவில்லை என்றும் தெரிவித்துள்ள ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர், தனது இயலாமையை மூடி மறைப்பதற்கே அவர் தற்போது இனவாதத்தை கையில் எடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது நிகழ்ந்த யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச பங்களிப்புடனான விசாரணைகள் நடத்தப்படுவதன் மூலம் மாத்திரமே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என இந்தவாரம் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்திருந்த பிரித்தானிய அரசாங்கத்தின் பொதுநலவாய மற்றும் ஐ.நா அலுவல்களுக்கான இராஜாங்க அமைச்சர் பர்னோஸ் அனேலாவிடம் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியிருந்தார்.

யுத்தக் குற்ற விசாரணைகள் குறித்த இந்தக் கருத்துக்களும் இனங்களுக்கிடையிலான உறவுகளை குழப்பி மீண்டும் நாட்டில், இனவாதத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது என ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.

முதலமைச்சர் பதவியை சரியாகப் பயன்படுத்த முடியாத தோல்வியடைந்த முதலமைச்சராக சீ.வி.விக்னேஸ்வரன் ஸ்ரீலங்காவின் வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள பிமல் ரத்நாயக்க, அவர் தன்னால் முதலமைச்சர் பதவியை வகிக்க முடியாது என்றால் பதவி விலக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts