தேர்தலை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும்! – ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

JeanLambertஇலங்கையின் வட. மாகாண சபைத் தேர்தலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்தவேண்டும் என ஐரோப்பிய யூனியன் இலங்கை அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.

கொழும்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய யூனியனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழர் பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.

இது தொடர்பாக பேசிய ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் ஜீன் லாம்பெர்ட், வடக்கு மாகாண சபைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தினால், இலங்கையின் அனைத்துத் தரப்பு மக்களும் மேம்பாடு அடைய வழிவகுக்கும் என்று கூறினார்.

மேலும், வெளிப்படையாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறுவதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்திய அவர், ஜனநாயக சூழலில் தேர்தலை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தமிழர் பகுதியில் இலங்கை ராணுவத்தினரின் ஆதிக்கம் இருப்பதாகவும் ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் லாம்பெர்ட் கவலை தெரிவித்தார்.

40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகள் மீது இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்திய லாம்பெர்ட், நல்லிணக்க ஆணையக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றவும் வலியுறுத்தினார்.

செப்டம்பர் மாத இறுதியில் இலங்கையின் வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த மாகாணத்தின் தற்போதைய ஆளுநராக உள்ள முன்னாள் ராணுவ அதிகாரியை நீக்க தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், ஜனநாயக சூழலில் தேர்தலை நடத்த வேண்டும் என ஐரோப்பிய யூனியனும் வலியுறுத்தியிருப்பது இலங்கை அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்துவதாக உள்ளது.

மேலும் வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் சுயாதீனமானதும், நீதியானதுமான முறையில் தேர்தல் நடாத்த தேவையான உதவிகள் வழங்கப்படும் ஜப்பான் தூதரகம் அறிவித்துள்ளது.

Related Posts