Ad Widget

வட மாகாண சபை: கடந்து வந்த வருடம் தந்த பாடங்களும் இனிச் செய்ய வேண்டியவையும்- குமாரவடிவேல் குருபரன்

யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகையின் 12 அக்டோபர் 2014 திகதிய வட மாகாண சபையின் ஒரு வருட பூர்த்தி விஷேட பதிப்பில் இக்கட்டுரையின் சுருங்கிய வடிவம் வெளியானது. அதன் முழுமையான வடிவம் அவரிடம் இருந்து பெறப்பட்டு இங்கு பிரசுரமாகிறது.

guru geneva_CI

ஆ.ர்

குமாரவடிவேல் குருபரன்: சட்டத் துறை விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

ஐ. நா பொதுச் சபையின் 69ஆவது கூட்டத் தொடரில் செப்டம்பர் 25, 2014 அன்று ஆற்றிய உரையில் வட மாகாண சபைத் தேர்தலை நடாத்தியமையை வடக்கிற்கு சனநாயகம் திரும்பியமைக்கான சான்றாக சனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ குறிப்பிட்டார். தமிழர்களுக்கு சனநாயக அதிகாரம் வழங்கிவிட்டேன் என்று சர்வதேசத்திடம் பறை சாற்றுவதற்கு வட மாகாண சபைத் தேர்தலையும் அதன் நிலவுகையையும் ராஜபக்க்ஷ தொடர்ந்து பாவித்து வருகிறார். வட மாகாண சபைத் தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்னர் ஐ. நா பொதுச் செயலாளர் பான் கி மூன் வட மாகாண சபைத் தேர்தல்கள் அரசியல் மீளிணக்கத்துக்கான வாய்ப்பை வழங்குவதாக ஊடக அறிக்கையில் தெரிவித்தார். இந்தியா அடிக்கடி தாம் தான் இந்தத் தேர்தலை நடத்தப்படுவதற்கான காரணகர்த்தா எனப் பெருமை பேசி வருகின்றது. எங்கள் தலைமைகளும் அதற்கு அடிக்கடி நன்றி சொல்லி வருகின்றனர். தேர்தல் நடந்து முடிந்த கையோடு இந்த தேர்தல் வெற்றி 1977இல் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீது பெற்ற வெற்றியிலும் பார்க்க முக்கியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் தெரிவித்தார். இந்தப் பத்திரிகையும் (உதயன்) தேர்தல் வெற்றிற்குப் பின்னரான தனது அடுத்த நாள் பதிப்பில் ‘தமிழர் அரசு’ ஒன்று மலர்ந்து விட்டதாக பறை சாற்றி தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்தியது.

இந்த மாதத்தோடு வட மாகாண சபை தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வருடமாகிறது. எதனை சாதிக்கக் கூடியதாக இருந்தது, எதிர்கொண்ட சவால்கள் என்ன, கற்ற பாடங்கள் என்ன என்பன பற்றி வட மாகாண அரசு தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேர்மையாக அறிக்கையிடவேண்டும். தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளுடன் ஒப்பிட்டு அடுத்த கட்டம் என்ன என்பது பற்றியும் கூற வேண்டும். பெரிதாக எதனையும் சாதிக்க முடியவில்லை என்றால் அது ஏன் என்பதனை ஆவணப்படுத்த வேண்டும். அது எமது அரசியலின் அடுத்த கட்ட நகர்வுக்கு முக்கியம். ஜனநாயக பொறுப்புக்கூறல் என்ற வகையில் இது முக்கியமானது. இச்சிறு கட்டுரையில் வட மாகாண சபையின் கடந்த ஒரு வருட இயங்குகை எமக்கு அளிக்கும் சில படிப்பினைகள் பற்றி சில அவதானிப்புக்களை முன்வைக்கிறேன். இனிச் செய்யத்தக்கவை எவை என்பதைப் பற்றியும் இறுதியில் குறிப்பிடுகின்றேன்.

வட மாகாண சபையின் ஒரு வருட கால அனுபவம் தரும் முக்கிய பாடம் ஒன்றே: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரிடமும் அமைச்சரவையிடமும் நிறைவேற்றுத் துறை அதிகாரங்கள் இல்லை; மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநரிடமே அந்த அதிகாரங்கள் குவிந்து கிடக்கின்றன; சட்டவாக்க அதிகாரங்களும் பெரிதாக இல்லை. எமது மக்களின் நாளாந்த, உடனடிப் பிரச்சனைகளுக்கு மாகாண சபை முறைமையை வைத்துக் கொண்டு பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது. (வட மாகாண சபையால் செய்ய முடிந்ததெல்லாம் எமது மக்களின் குரலாக அவ்வப்போது சில தீர்மானங்களை நிறைவேற்றியமையே. இது தேவை தான். ஆனால் இதை மட்டுமே சாதனையாக கருத முடியாது). எதை நாம் சட்டத்தில் அறிந்து வைத்திருந்தோமோ அதை இன்று நடைமுறையில் அனுபவித்துள்ளோம். இதைத் துணிகரமாக வட மாகாண சபை சொல்ல முன் வர வேண்டும். ஆடத் தெரியாதவனுக்கு கூடம் சரியில்லை என்று எதிர்க் கட்சி நக்கலடிக்குமே என்று பயப்படுவதில் பிரயோசனம் இல்லை. கூடம் சரியில்லை என்பது தான் உண்மை. உண்மை உண்மையாக உரைக்கப்பட வேண்டும். உலகத்தாருக்கு கேட்கும் வரைக்கும் உரத்துச் சொல்லப்பட வேண்டும்.

வட மாகாண சபையின் ‘ஆளுநர் பிரச்சனை’.

மாகாண சபையின் நிறைவேற்றுத்துறையில் ஆளுநர் பரம்பொருளுக்கு நிகரான நிலையைக் கொண்டுள்ளவர். மாகாணப் பொதுச் சேவையின் முழுக் கட்டுப்பாடும் ஆளுநரிடமே. மாகாணப் பொதுச் சேவைக்கு ஆட்களை நியமிப்பது, நீக்குவது, ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதும் ஆளுநரின் அதிகாராதிற்குட்பட்டவை என மாகாண சபைச் சட்டம் (பிரிவு 32)தெரிவிக்கின்றது. ஆளுநர் இந்த அதிகாரங்களை மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கலாம். ஆனால் அந்த மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழுவை நியமிப்பவரும் ஆளுநரே. மாகாணத்தின் பிரதம செயலாளர் போன்றோர் (மத்திய) பொதுச் சேவை ஆணைக்குழுவின் அதிகார எல்லைக்கு உட்பட்டவர்கள். மாகாணப் பிரதம செயலாளருக்கு உத்தரவிடும் அதிகாரம் மாகாண முதலமைச்சருக்கு இல்லை என்பதை பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஷ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் மூலம் உறுதியாகிறது. உண்மையில் இந்த வழக்கில் முதலமைச்சர் தரப்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் முதலமைச்சருக்கு பிரதம செயலாளர் மீது அதிகாரம் உண்டு என வாதிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக இடைக்கால உத்தரவொன்று நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட பின்னர், தான் தாக்கல் செய்த சத்தியக் கடதாசியில், சர்ச்சைக்குரிய சுற்று நிருபத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாக முதலமைச்சர் உயர் நீதிமன்றிற்கு தெரிவித்தார். அந்தக் கட்டத்திலேயே அந்த வழக்கு முடிவுற்றது என்று தான் கொள்ள வேண்டும்.

பிரதம செயலாளர் மட்டுமன்றி முதலமைச்சரின் செயலாளர், அமைச்சர்களின் செயலாளர்கள் எல்லோருமே இலங்கை நிர்வாக சேவை (SLAS) அதிகாரிகள். இவர்கள் மீதும் உண்மையான கட்டுப்பாடு அவ்வவ் அமைச்சர்களுக்கில்லை என்பதே உண்மை. SLAS அதிகாரிகள் மற்றும் மத்திய பொதுச் சேவை ஆணைக்குழுவால் நியமிக்கப்படுபவர்களைத் தவிர மீதமுள்ள மாகாணப் பொதுச் சேவை ஏலவே குறிபிட்டது போல ஆளுநரின் நேரடி கட்டுப்படுக்குட்பட்டது. முதலமைச்சரின் நேரடி ஆணையின் கீழ், அவருக்கு மட்டும் பொறுப்புக் கூறும் ஒரு அரச ஊழியர் தானும் இல்லை என்பதே உண்மை. கிராம சேவையாளருக்கு கட்டளை இடும் அதிகாரம் கூட இல்லை என்று அடிக்கடிச் சொல்லக் கேள்விப்படுவது வெறும் வார்த்தை அல்ல; உண்மை. இவை போதாதென்று சனாதிபதி பிரேமதாசா காலத்தில் நிறைவேற்றப்பட்ட அதிகார கைமாற்ற சட்டத்தின் (Transfer of Powers Act No 58 of 1992) பிரகாரம் மாகாண சபையால் நிறைவேற்றப்படும் சட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பு பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டது. பிரதேச செயலாளர்கள் பொறுப்புக் கூறுவது முதலமைச்சரிடம் அல்ல. அவர்களைக் கட்டுபடுத்துவதும் மத்திய அரசாங்கம் தான். வட மாகாண சபை தேர்தலுக்கு முன்னர், ஆளுநர், அரச சேவை உத்தியோகஸ்தர்களுக்கான கூட்டமொன்றில் ‘தெரிவு செய்யப்பட மாகாண சபை நிர்வாகம் வந்த பின்னரும் நானே உங்களுக்கு கட்டளையிடுவேன், அதுவே சட்டம்’ என அதிகாரத் தொனியில் ஞாபகப்படுத்தியதாக செய்தியும் உண்டு.

வட மாகாண சபையினது ஆரம்பம் தொட்டு தெரிந்தெடுக்கப்பட்ட மாகாண சபை நிர்வாகத்திற்கும் வடக்கு அரச சேவை உத்தியோகஸ்தர்களுக்கும் இடையே முரண்பாடான உறவுநிலை இருந்து வருகிறது. தமக்கு விசுவாசமாக அரச ஊழியர்கள் இல்லை என்ற வருத்தம் வடமாகாண சபைக்கு ஆரம்பத்திலிருந்து இருந்து வருகிறது. வட மாகாண சபை அரச ஊழியர்களை குறை கூறுவது மேற் சொன்ன காரணங்களுக்காக எய்தவன் இருக்க அம்பை நோவதற்கு ஒப்பானது. அரச ஊழியர்களில் சிலர் அதீத மத்திய அரசு விசுவாசத்தை தங்கள் சொந்த நலன்களுக்காக காட்டுகின்றனர் என்ற உண்மை ஒரு பக்கம் இருக்கவே செய்தாலும் தமது பதவியை ஆபதுக்குள்ளாக்காமல் அவர்களால் வட மாகாண அமைச்சரவையின் முழுமையான திட்டத்தை உள்வாங்கி அவர்களுக்கு ஒத்திசைவாக இயங்க முடியாது என்பதும் கடினமான நிதர்சனமே. உயர் பதவியிலுள்ள அரச உத்தியோகஸ்தர்கள் இப்படியான ஆபத்துக்களை எதிர்கொண்டு தமது சௌகரிய செயற்பாட்டு வெளிகளுக்கப்பால் வந்து செயற்படத் தயாராக வேண்டும் என்று சமூகம் அவர்களிடம் எதிர்பார்க்கின்றது. அப்படியான எண்ணம், சிந்தனை, முனைப்பு இல்லாமல் தமிழ்ச் சமூகம் தான் சந்திக்கும் ஆபத்துக்களிலிருந்து விடுபட முடியாது என்பதை அவர்கள் உணர வேண்டும். உயர் பதவி வகிக்கும் தமிழ் அரச உத்தியோகஸ்தர்கள் தத்தமது சமூகப் பங்களிப்பு பற்றி யோசிக்க வேண்டும். பொது நிர்வாக அலுவலர்கள் மட்டுமன்றி சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் பொதுப் பணியாற்றும் அனைத்து மத்தியதர வர்க்கத்தினரும் தமது வேலைத் தளம் சார்ந்து ஆற்றும் உத்தியோகபூர்வ காரியங்களின் அறவொழுக்கம் பற்றி சிந்திக்க வேண்டும். அது வங்கியாளர்களாக இருக்கலாம், நீதிபதிகளாக இருக்கலாம், பல்கலைக்கழக நிர்வாகிகளாக இருக்கலாம், பாடசாலை அதிபர்களாக இருக்கலாம். தமது மக்களையே ஒடுக்கும் அரச இயந்திரத்தின் ஏவலாளர்களாக அல்லாமல் தமது அதிகார எல்லைகுட்பட்டேனும் தமது மக்களுக்கு நன்மை செய்ய முடியாவிடினும் தீமையாவது விளையாமல் செயலாற்ற முடியுமா என்று சிந்திக்கத் தொடங்க வேண்டும். இதுவும் ஒரு வகையில் சாத்வீகப் போராட்டம் தான். இத்தகைய தேடல், சிந்தனைக்கு உதவும் வகையில் வட மாகாண அரசியல் தலைமைத்துவம் கருமமாற்ற வேண்டும். தமிழ் அரச ஊழியர்களோடு மோதுவது ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குகொண்டாட்டமாக அமைந்து விடும் என்பதனை மனதில் கொள்ள வேண்டும். நிற்க.

வட மாகாணசபையின் ‘ஆளுநர் பிரச்சனை’ வெறுமனே நிறைவேற்றுத் துறை அதிகாரங்களைப் பிரயோகிப்பதில் மட்டுமல்ல. அண்மையில் நிதி மசோதாக்கள் சிலவற்றை வட மாகாண சபையில் நிறைவேற்றுவதிலும் இந்த ஆளுநர் பிரச்சனை வெளிப்பட்டது. முதலமைச்சர் நிதியத்தை உருவாக்குவதற்கான மசோதாவை பின் வாங்கும் அளவிற்குப் பிரச்சனை இருந்தது. இதற்கு காரணம் நிதி மசோதாக்களை அவையில் சமர்ப்பித்து விவாதிப்பதற்குக் கூட ஆளுநர் அனுமதியை சட்டம் தேவைபடுத்துவதாலேயே ஆகும்.

ஆளுநர் பிரச்சனையா? 13ஆம் திருத்தம் தான் பிரச்சனையா?

‘ஆளுநர் பிரச்சனையை’ கையாள வட மாகாண சபையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எடுத்துக் கொண்ட முயற்சி என்ன என்பதை சற்று பார்ப்போம். தேர்தல் பிரசாரத்தின் போது இராணுவ ஆளுனரை மாற்றி சிவிலியன் ஆளுனரை நியமிக்க வேண்டும் என்பது முக்கிய கோஷமாக்கப்பட்டது. ‘சனாதிபதியின் முன் முதலமைச்சர் பதவியேற்பதன் மூலம் இணக்க அரசியலின் சில கூறுகளை நாம் சுவீகரிக்கத் தயார், பதிலுக்கு ஆளுநரை மாற்றுங்கள்’ என்ற கூட்டமைப்பின் அணுகுமுறை முழுமையாக தோல்வியடைந்துள்ளது. வட மாகாண சபையின் 11 நவம்பர் 2013 அன்றைய அமர்வின் போது ஆளுநரைப் பதவி நீக்கச் சொல்லி மாகாண சபை உறுப்பினர், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆனால் அது அரசியலமைப்பில் சொல்லப்பட்ட செயன்முறைமையை (அரசியலமைப்பின் உறுப்புரை 154 (B) (4)) பின்பற்றி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் போல தெரியவில்லை. (அரசியலமைப்பை வேண்டுமென்றே உதாசீனம் செய்தார், ஒழுக்கக் குறைவாக நடந்து கொண்டார், போன்ற விடயங்களில் எதை ஆளுநர் மீறினார் என்பதைச் சுட்டிக் காட்டி நிறைவேற்றப்பட்ட தீர்மானமாக இது தெரியவில்லை) அப்படி நிறைவேற்றியிருந்தாலும் ஆளுநரை நீக்குமாறு அதை வைத்துக் கொண்டு சனாதிபதிக்கு ஆலோசனை மட்டுமே வட மாகாண சபை கூறலாம். ஆளுநர் சனாதிபதி விரும்பும் வரை பதவி வகிக்கலாம் என்றே அரசியலமைப்பு கூறுகிறது.

ஆனால் இராணுவ ஆளுநர் தான் பிரச்சனையா? அல்லது ஆளுநர் என்ற நிறுவனத்திற்கு 13ஆம் திருத்தம் கொடுத்திருக்கும் அதிகாரங்கள் தான் பிரச்சனையா? ஆளுநர் யாராக இருந்தாலும் முழுமையாக வழிநடத்தப் போவது ஜனாதிபதி தான் என்பது தெரிந்தும் முழு முறைமையை பிரச்சனைக்குட்படுத்தாமல் வெறுமனே யார் பதவியில் இருக்கிறார்கள் என்பதை மட்டும் பிரச்சனையாக்குவது போதாது. நாளையே தற்போதைய இராணுவ ஆளுநருக்குப் பதிலாக ஒரு சிங்களப் பேராசிரியரை – ஏன் தனக்கு விசுவாசமான தமிழர் ஒருவரை சனாதிபதி நியமிப்பார் என்று வைப்போம். தற்போதைய ஆளுநரைப் போலவே அவரும் நடந்து கொள்வார் என்று வைப்போம். அப்போது என்ன சொல்லப் போகிறோம்? த.தே.கூ வட மாகாண சபைத் தேர்தல் காலத்திலேயே யார் ஆளுநர் என்பதை வைத்து பிரச்சாரத்தை முன்னெடுத்து, தனிநபர் தான் பிரச்சனை, முறைமை இல்லை என்ற மயக்கத்தை ஏற்படுத்தியது.

இராணுவ அதிகாரி வேண்டாம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் பிரச்சனை அடிப்படையில் 13ஆம் திருத்தத்தின் கட்டமைப்பு சார் போதாமைகளில் உள்ளது என்பதைச் சொல்லுவதே எமது அரசியல் தலைமையின் பொறுப்பு. நோயின் வெளிக்குணம் குறிகளுக்கு தீர்வை கேட்பது நோயை தீர்ப்பதாகாது. ஆளுனரை மாற்றுவதால் வட மாகாண சபைக்கு அதிகாரங்கள் கிடைக்காது. அதிகாரங்கள் அற்ற மாகாண சபைக்கு, ‘முழுமையாக 13ஆம் திருத்தத்தை நிறைவேற்றுங்கள்’ என்று கேட்பதில் பயனில்லை. காணி அதிகாரங்கள் கொஞ்சம் உண்டு என்று சொன்னவர்கள் உண்டு. ஆனால் எங்களது தலையாய பிரச்சனை காணி சுவீகரிப்பு. அதனைத் தடுக்க 13ஆவது திருத்தத்தின் ஊடாக வாய்ப்பில்லை (முழுமையாக நடைமுறைப்படுதினாலும் வாய்ப்பில்லை தான்). காவல் துறை அதிகாரங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை தான். நடைமுறைப் படுத்தினாலும் முன்னாள் முதல்வர் வரதராஜப் பெருமாள் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டது போன்று எமது மாகாணக் காவல் படை சீருடை அணிந்து நித்திரை கொள்ளத்தான் அதிகாரம் உள்ளவர்களாக இருப்பார்கள். இல்லாத அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என்ற கதையை விட வேண்டும். ஒற்றையாட்சி தத்துவத்திற்கு உட்பட்டிருக்கும் 13ஆம் திருத்ததிற்கு பிளஸ் (13+) கேட்டும் பிரயோசனம் இல்லை. ஒற்றயாட்சிகுள் பிளஸ் போட முடியாது; பிளஸ் போட இடமில்லை என்று உயர் நீதிமன்றம் எப்பவோ தீர்ப்பளித்து விட்டது. வட மாகாண சபை எதிர் கட்சித் தலைவர் சொல்வது போல் செயல்திறன் இல்லாமையால் வட மாகாண சபையால் சாதிக்க முடியவில்லை என்பது தவறு. அரசாங்கத்தோடு சேர்ந்திருந்த முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானைக் கேட்டாலே விளங்கும் மாகாண சபை முறைமையின் வங்குரோத்து நிலை.

இரண்டாமாண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் வட மாகாண சபை, தெளிவாக 13ஆம் திருத்தத்தால் ஒரு பயனும் இல்லை என்பதைச் சொல்ல வேண்டும். 13ஆம் திருத்தம் தான் அரசியல் தீர்வுக்கான பாதையில் இன்றுள்ள பிரதான தடைக்கல். முயற்சித்துப் பார்த்தோம்; பிரயோசனம் இல்லை என்று சொல்லுவது தான் வட மாகாண சபை தமிழர்களுக்கு செய்யக் கூடிய மிகப் பெரிய கைங்கரியம். இதைச் செய்து கொண்டு, சமாந்திரமாக,தேவையெனின் மாகாண சபைக் கட்டமைப்புக்கு வெளியில் நின்று கொண்டு, துணிந்து, தூரப் பார்வையுடன் புதிய பயணம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். மக்களின் நாளாந்த தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையிலான ‘அவுட் ஒப் தி பாக்ஸ்’ செயற்பாடுகள்/முயற்சிகள் தேவை. மாகாண சபை தந்த அரசியல் வெளியை, செல்வாக்கைப் பாவித்து மக்கள் மயப்பட்ட நிறுவனங்களை மாகாண சபைக்கு வெளியில் நிறுவவேண்டும். அமைச்சர்களாக இருந்து கொண்டே அமைச்சுகளுக்கு வெளியில் வந்து செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். உதாரணமாக முதலமைச்சர் நிதியத்தை ஆளுநர் தடுத்தார் என்பதோடு விடாமல் நிதியத்தை மாகாண சபைக் கட்டமைப்புக்கு வெளியால் நிறுவுங்கள். நான்கு அமைச்சர்களையும் முதலமைச்சரையும் அதன் பொறுப்பாளர்களாக நியமியுங்கள். திட்டங்களை மக்கள் முன் பகிரங்கமாக வையுங்கள். கைதடி மாகாண சபை கட்டடத்திலேயே உத்தியோக பற்றற்ற அமர்வுகளை நடத்துங்கள். அந்தக் கட்டடத்தை மக்கள் பங்குபற்றலுக்கு விடுங்கள். சாத்வீகப் போராட்டம் பற்றி அடிக்கடி அறிவிப்பு வருகிறது. உயிரை கொடுப்பதற்குத் தயார் என்றும் சொல்கிறார்கள். பெட்டிக்குள்ளிருந்தும் பெட்டிக்கு வெளியே சிந்திக்கலாம். நிதானமாக செயற்படுகிறோம் என்று சொல்லிக்கொண்டு ஒரே இடத்தில் பழைய பல்லவி பாடிக் கொண்டிருப்பதில் இருப்பதில் புண்ணியமில்லை. சாத்வீகப் போராட்டம் வெற்றியளிப்பதற்கு ஆக்கத் திறனான புதிய சிந்தனை தேவை. மக்கள் பங்குபற்றல் வேண்டும். திட்டமிடல் வேண்டும். பழையன கழிந்து புதிய மார்க்கம் வேண்டும்.

——

பிற்குறிப்பு:

இக்கட்டுரை 02 அக்டோபர் 2014 அன்று எழுதி முடிக்கப்பட்டது. 10 அக்டோபர் 2014 சனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் எழுதிய கடிதம் முக்கியமானது. அக்டோபர் 13ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள விஷேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிற்கு வர முடியாது என்று அறிவித்து எழுதிய அக்கடிதத்தில் தமது ஒரு வருட அனுபவத்தில் ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்கு உட்பட்ட 13ஆம் திருத்தம் ஒரு உள்ளடக்கமற்ற வெற்று நிறுவனம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கடிதத்தின் பந்தி 11ஐ முழுமையாகத் தருகிறேன்: “நாம் ஒரு வருடம் பதவியில் இருந்து வந்துள்ள இன்றைய நிலையில் வடக்கில் மட்டுமன்றி கிழக்கிலும் கூட மாகாண சபை ஆட்சி முறைமை எமது ஒற்றையாட்சி முறைமையின் கீழ் ஒரு அதிகாரமற்ற ஓட்டை அமைப்பாகவே தென்படுகின்றது. தற்போதைய ஆட்சி முறையில் குறிப்பாக யுத்தத்திற்கு பின், நிலையான அரசியல் தீர்வு எதுவுமற்ற நிலையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கு மாகாண சபையானது அதிகாரமற்றதொன்றாகவே தென்படுகின்றது”. 13ஆம் திருத்தத்தின் உண்மையான சுய ரூபத்தை முதலமைச்சர் முழுமையாக வெளிக்கொணர்வதற்குத் தயாராக இருப்பதற்கான முதல் படியாக இதைக் கொள்ளலாமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். –

கு. குருபரன் –
சட்டத் துறை விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

Related Posts