வட மாகாண சபை அமைச்சுக்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மற்றும் 4 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அமைச்சுக்கள், பகிர்ந்தளிக்கப்பட்ட விடயங்கள், அரசியலமைப்பு ஏற்பாடு, அமைச்சர்களுக்கு அறிக்கையிடுவதற்கு பொறுப்பான உறுப்பினர்கள் விபரங்களைக் கொண்டதாக இப் பட்டியல் அமைந்திருக்கிறது.
முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு 16 அமைச்சுக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் உள்ளுராட்சி மற்றும் மாகாண நிர்வாக அமைச்சில் நிர்வாகம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. சட்டம், ஒழுங்கு அமைச்சில் மனித உரிமைகள் உட்பட மாகாணத்திற்குட்பட்ட பொலிஸ், பொதுமக்கள் ஒழுங்கு விவகாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிதி,திட்டமிடல் அமைச்சில் நிதியும் மாகாணப் பொருளாதார திட்ட அமுலாக்கல் தொடர்பாக அறிக்கையிடும் பொறுப்பு கலாநிதி கே.சர்வேஸ்வரனுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அமைச்சில் வீதிகள், பாலங்கள், மாகாண வீடமைப்பு தொடர்பாக அறிக்கையிடுவதற்கு பொறியியலாளர் வி.சிவயோகன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சில் கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் கூட்டுறவு வங்கிகள் போன்ற விடயங்கள் சட்டத்தரணி கே.சயந்தன் மற்றும் சுகிர்தனுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காணி அமைச்சின் கீழ் காணிகள், சுவீகரிப்பு தொடர்பாக அறிக்கையிடும் பொறுப்பு அமைச்சர் டெனீஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சமூக சேவைகள், புனர் வாழ்வு, மகளிர் விவகாரம், காணாமல் போனோர் தொடர்பான அறிக்கையிடும் பணி திருமதி.அனந்தி சசிதரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின்னரான மீள்குடியேற்றம், மீள் கட்டுமானம் தொடர்பாக அறிக்கையிடுவதற்கு அன்ரன் ஜெயநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கல்வி அமைச்சராக குருகுலராஜாவும், சுகாதார அமைச்சராக டாக்ரர் பி.சத்தியலிங்கமும், மீன்பிடி, போக்குவரத்து அமைச்சராக டெனீஸ்வரனுக்கும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.