வட மாகாண சபையில் 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் முன்வைப்பு

வட மாகாண சபைக்கான 2017 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம் இன்று முதலமைச்சர் சீ.வி. வினேஸ்வரனினால் வாசிக்கப்பட்டது.

வட மாகாண சபையில் ஒருங்கிணைந்த கட்டமைப்புக்கூடாக ஐந்து மாவட்டங்களிலும் செயற்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நிதி ஆணைக்குழுவினால் 2017 ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவுத்திட்டத்தினூடாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2017 ஆம் ஆண்டு வட மாகாணத்திற்கான செலவினங்களுக்காக 19 ஆயிரத்து 321.73 மில்லியன் ரூபாவும், மூலதன செலவினங்களுக்காக 2 ஆயிரத்து 208.38 மில்லியன் ரூபாவும், வெளிநாட்டு – உள்நாட்டு நிதியளிப்புகளுக்களின் கருத்திட்டங்களுக்கு 3 ஆயிரத்து 409.73 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மீண்டுடெழும் செலவின நிதியீட்டமாக மத்திய அரசின் தொகுதிக் கொடையில் இருந்து 16 ஆயிரத்து 476.3 மில்லியனும், மத்திய அரச சேகரிப்பு நிதியில் இருந்து 2 ஆயிரத்து 300.00 மில்லியனும், மாகாண சபை வருமான சேகரிப்பு நிதியில் இருந்து 545.00 மில்லியனும் ஒதுக்கீடாக கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வாறாக ரூபா 19 ஆயிரத்து 321.73 மில்லியன் வடக்கு மாகாண சபையின் மீண்டெழும் செலவினங்களுக்காக 2017 ஆம் ஆண்டு பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலதன செலவினங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 2 ஆயிரத்து 208.38 மில்லியனில் பிரமாண அடிப்படையிலான கொடையின் கீழ் 551.2 மில்லியனும், மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக்கான நன்கொடையின் கீழ் ரூபா 1,657.18 மில்லியனும் ஒதுக்கீடாக கிடைக்கப்பெற்றுள்ளது.

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நன்கொடையின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 1,657.18 மில்லியனில் பொருளாதார உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு 788.0 மில்லியனும், சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு 737.0 மில்லியனும், பின்தங்கிய கிராமங்களின் அபிவிருத்திக்காக 120.0 மில்லியனும், முன்னுரிமைப்படுத்தப்பட்ட அவசிய திட்டங்களை நிறைவேற்றுவதற்காக 12.18 மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு இணை நிதியளிப்புக்களுக்கூடான அபிவிருத்தித்திட்டங்களுக்கென அனுமதிக்கப்பட்ட தொகையில் பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையத்தின் அடிப்படையாக மாற்றும் செயற்றிட்டத்திற்காக 315.0 மில்லியனும், சுகாதாரத்துறை அபிவிருத்தித்திட்டங்களுக்காக 360.0 மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் வடக்கு வீதி இணைப்பு அபிவிருத்தித் திட்டத்திற்காக 748.73 மில்லியனும், இரணைமடு நீர்ப்பாசனத் திட்டத்திற்காக 1,077.0 மில்லியனும், யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர்விநியோகத்துக்கும், சுகாதார மேம்பாட்டு கருத்திட்டங்களுக்குமாக ரூபா 909.0 மில்லியனும் மத்திய அரசின் நேரடியான நிதி ஆளுகையினால் வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

2017 ஆம் ஆண்டுக்கு வட மாகாண சபையினால் கோரப்பட்ட நிதித்தேவையின் பிரகாரம் மீண்டெழும் செலவினத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட நிதித்தேவை ரூபா 22,329.613 மில்லியன்களாக இருந்த போதிலும், ரூபா 19,321.737 மில்லியன்களே இம்மாகாணத்திற்கு அனுமதிக்கப்பட்ட தொகையாக கிடைக்கப்பெற்றுள்ளது. இது கோரப்பட்ட தொகையின் 86.5 வீதம் மட்டுமே.

இதேவேளை மூலதனச் செலவின் கீழ் மாகாண குறித்தொதுக்கப்பட்ட மூலதன நன்கொடையின் மூலம் 10,672.48 மில்லியன் நிதித் தேவைகள் சமர்ப்பிக்கப்பட்ட போதும் ரூபா 1,657.18 மில்லியன்களே அனுமதிக்கப்பட்ட தொகையாக கிடைக்கப் பெற்றுள்ளது. அதாவது 16 வீத நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடையினை பொறுத்தவரையில் 2016 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும் போது 16 வீத நிதி 2017 ஆம் ஆண்டுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் வடக்கு முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டம் இன்று முன்வைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து மூன்று நாட்கள் வடமாகாண சபையில் விவாதம் இடம்பெறவுள்ள நிலையில், நாளை மறுதினம் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts