தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தின் கீழிருக்கின்ற வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 25ஆம் திகதியுடன் ஒருவருடம் நிறைவடைந்துள்ள நிலையில், வடமாகாண சபையின் நேற்றைய அமர்வில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கிடையே கடும் வாய்ச்சண்டை நிலவியது.
இதனால் சபையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. வாய்ச்சண்டையின் போது தங்களுக்குள்ளே சிரித்துக்கொண்டே எதிர்த்தரப்பினர், அவர்களுக்குள்ளே அடித்து கொள்கின்றனர் என்று முணுமுணுத்து கொண்டனர். எனினும், சபையில் ஒன்றுமே நடக்காதது போல, முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் ஏதோ ஆவணங்களை புரட்டிக்கொண்டிருந்தார்.
வழமையாக 9.30க்கு ஆரம்பமாகும் வடமாகாண அவை நடவடிக்கைகள் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டடத்தொகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை, தவிசாளர் சி.வி.கே சிவஞானம் தலைமையில் 9.45 மணிக்கே ஆரம்பமானது.
வடமாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டமையால், அவை நடவடிக்கைகள் 15 நிடங்கள் தாமதமாகவே ஆரம்பமாகின. இந்த மருத்துவ சோதனை வட மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா, விசேட அதிதியாக நேற்று வருகைதந்து அவை நடவடிக்கைகளை பார்வையிட்டார்.
அவையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், கடந்த ஒருவருட காலப்பகுதியில் சட்டங்கள் மூன்று நிறைவேற்றப்பட்டன என்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பிரேரணைகளை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் பட்டியலிட்டார்.
அத்துடன் இன்றைய அமர்வில், (நேற்று) கூட்டுறவு சங்கங்கள், 1995-96ஆம் ஆண்டுகளில் அடகுவைக்கப்பட்ட நகைகள் மற்றும் ரயில்சேவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரான தனியார் பஸ் வழித்தட கட்டணத்திருத்தம் ஆகிய மூன்று விடயங்களும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.
1995-96ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் அடகுவைக்கப்பட்ட நகைகள், கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டமையால், அவற்றை பெற்று உரியவர்களிடம் கொடுக்கவேண்டும். இல்லையேல் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்காக அவற்றை மாகாண சபைக்கு கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்படும் என்று அவைத்தலைவர் அறிவித்தார்.
அடுத்ததாக கூட்டுறவு சங்கங்கள் தொடர்பிலான பிரேரணை விவாதத்துக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
இதன்போது எழுந்த, பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெயநாதன், வட மாகாண அமைச்சரவையில் எடுக்கப்படும் தீர்மானங்களை உறுப்பினர்களுக்கு அறிவிக்காமல், அந்த விடயங்களை அமைச்சர்கள் மறைக்கின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
அத்துடன் ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்வுகளில் எங்களை பங்கேற்கவேண்டாம் என்று எவரும் உத்தியோகபூர்வமாக அறிவிப்பதில்லை. ஆனால், முதலமைச்சரும் வடமாகாண அமைச்சர்களும் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடுகின்றனர் இதில் என்ன நியாயம் இருக்கின்றது.
வடமாகாண அமைச்சர்கள், தாங்கள் சார்ந்த பிரதேசங்களுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்களை செயற்படுத்துகின்றனர். யாழ்ப்பாணத்தில் மட்டும் பார்த்தீனியம் செடி இருக்கவில்லை. முல்லைத்தீவிலும் இருக்கின்றது. இருந்தும் அங்கு பார்த்தீனியம் அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
மேலும், மன்னார் முள்ளிக்குளத்தில் உள்ள மக்கள் மட்டும் வீடுகள் அற்ற நிலையில் கஷ்டப்படவில்லை. முள்ளிவாய்க்கால் மக்களும் வீடுகள் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர்.
அமைச்சர்கள் தங்களுடைய மாவட்டங்களுக்கு மட்டும் அமைச்சர்கள் அல்ல. வட மாகாணத்திலுள்ள 10 இலட்சம் மக்களுக்கும் அமைச்சர்கள். அவர்கள், அனைத்து மக்களையும் ஒரேவிதமாக பார்க்கவேண்டும். போரால் அதிகம் பாதிப்புக்குள்ளான முல்லைத்தீவு மாவட்டத்தை ஒதுக்கி வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
உண்மைகளை மறைக்காமல் வெளிக்கொணர வேண்டும். அமைச்சரவையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அமைச்சர் தங்கள் அதிகாரங்களை உறுப்பினர்களுக்கும் வழங்கி செயற்பட வேண்டும்.
அதேசமயம், செயற்றிறன் மிக்க நியதிச்சட்டங்கள் கொண்டு வரப்பட்டு திட்டங்கள் செயற்படுத்தப்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கேசவன் சயந்தன்
இதன்போது எழுந்த உறுப்பினர் கேசவன் சயந்தன் கருத்து தெரிவிக்கையில், பிரேரணை என்பது பத்திரிகையில் வரும் செய்திகளை தொகுத்து பிரேரணைகளாக நிறைவேற்றி, மீண்டும் பத்திரிகைகளில் பிரசுரிக்கும் நடவடிக்கையாகும். ஆனால், நியதிச்சட்டங்கள் ஒரு ஒழுங்கு முறையில் செயற்படுத்தத்தக்க விடயமாகும்.
எம்.கே.சிவாஜிலிங்கம்
நியதிச்சட்டங்களை உருவாக்கி அதனை கொழும்பிலுள்ள சட்டவல்லுநர்களிடம் கொடுத்துவிட்டு, வடமாகாண சபை உறங்கக்கூடாது. மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என சிந்தித்து செயற்பட வேண்டும் என்று உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
சின்னத்துரை தவராசா
இதனிடையே எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, நியதிச்சட்டங்களை உருவாக்கி அதனை 10 நாட்களுக்குள் செயற்படுத்த என்னால் முடியும். வடமாகாண சபை புதிதாக உருவாக்கப்பட்ட சபை ஆகும். இருந்தும் மற்றைய 8 மாகாணங்களிலும் நியதிச்சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன.
அவற்றை நாம் எமது மாகாணத்துக்கு ஏற்ற விதத்தில் மாற்றியமைத்து அமுல்படுத்த முடியும். அதன் மூலம் செயற்பாடுகளை செயற்படுத்தி குறைகளையும் திருத்திக்கொள்ள முடியும் என்று சுட்டிக்காட்டினார்.
அனந்தி சசிதரன்
வட மாகாண சபைக்கு வந்து செல்லும் போது நாங்கள் பெரும் மனக்கஷ்டத்துடன் வந்து செல்கின்றோம். ஐந்து அமைச்சர்களை மட்டுமல்லாது உறுப்பினர்களையும் உள்ளடக்கியது தான் வடமாகாண சபை. அமைச்சரவை தீர்மானங்கள் எங்களுக்கு அறிவிக்கப்படுவது கட்டாயமாகும் என்று உறுப்பினர் அனந்தி சசிதரன் தனதுரையில் தெரிவித்தார்.
அமைச்சர் பா.டெனீஸ்வரன்
இதனிடையே எழுந்த மீன்பிடி, போக்குவரத்து மற்றும் வர்த்தக, வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன், அமைச்சர்களின் செயற்பாடுகளை தூக்கி எறிந்து பேசவேண்டாம். அமைச்சரவை தீர்மானங்களை நிறைவேற்றும் போது நாங்கள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்குகின்றோம்.
உறுப்பினர்கள் வீடுகளில் படுத்து உறங்கி எழுந்து வந்து குறைகளை கூறவேண்டாம். அமைச்சரவை கூட்டங்களில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு அங்கு நடப்பவை பற்றி அறிய முடியும் என்றார்.
வாத விவாதங்களுக்கு மத்தியில் இந்த மூன்று பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டன.