வட மாகாண கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதியத்துடன் பயிற்சி! : சனத் ஜயசூரிய

sanath-jayasuriyaவடமாகாணத்தைச் சேர்ந்த ஐந்து அல்லது ஆறு வீரர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு ஊதியத்துடன் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களின் 23 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்று நடைபெற்று வருகின்றது.

ரணதுங்க மற்றும் அரவிந்த டி சில்வா அணிகள் என இரு அணிகளாகப் பிரித்தே இந்த போட்டி சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் கடந்த சனிக்கிழமை முதல் நடைபெற்று வருகின்றது.

மேற்படி போட்டிகளிலிருந்து, வீரர்களைத் தெரிவு செய்து தேசிய பயிற்சி முகாமில் இணைப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக் குழு தலைவர் சனத் ஜெயசூரிய ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரண்டு தினங்களாக இங்கு நடைபெறும் துடுப்பாட்டப் போட்டிகளிலிருந்து, ஜந்து அல்லது ஆறு வீரர்களை தெரிவு செய்வதற்காக தாம் யாழ்ப்பாணம் வந்துள்ளதாகவும், தெரிவு செய்யப்படும் வீரர்களுக்கு ஊதியத்துடன் பயிற்சிகள் வழங்க தாம் ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு மாகாண வீரர்கள் எதிலும் ஒதுங்கி நிற்கும் தமது பழக்கத்தினை மாற்றியமைத்து, அனைத்திலும் பங்குபற்ற முன்வரவேண்டும். உடனேயே எல்லாம் கிடைத்து விடும் என்று இல்லை. நான் கூட தேசிய அணியில் இடம்பெற்றும் போட்டிகளில் பங்குபற்றாமல் 5 வருடங்கள் மேலதிக ஆட்டக்காரராக மைதானத்திற்கு வெளியில் இருந்தே, இன்று இந்நிலைக்கு வந்தேன்.

விளையாட்டு வீரர்களுக்கு ஆர்வம் மட்டுமன்றி பொறுமையும் முக்கியமானது. நான் பதவியில் இருக்கும் போது, வடக்கு கிழக்கு மாகாண துடுப்பாட்ட வீரர்களை தேசிய அணியில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வேன். வடக்கு கிழக்கு மாகாண வீரர்கள் தேசிய அணியில் உள்வாங்கப்பட்டதற்கு ரசல் ஆர்னல்ட் சிறந்த உதாரணமானவராவார்.

இதன் முதற்படியாக அடுத்து நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பிறிமியர் லீக்கில் வடக்கு அணிக்காக (உதுர) வடமாகாண வீரர் இடம்பெறுவதற்கு ஒழுங்குகள் செய்யவுள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts