வட மாகாண ஆளுநர் கிண்ண சதுரங்க சுற்றுப் போட்டி

வடமாகாண ஆளுநர் கிண்ண மாபெரும் சதுரங்க சுற்றுப்போட்டியொன்றினை நடாத்துவதற்கு வடமாகாண ஆளுநர் செயலகம் தீர்மானித்துள்ளது. வடமாகாண விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் இதனை செயற்படுத்த எண்ணியுள்ளது.

இச்சுற்றுப் போட்டியில் வடமாகாணத்தை சார்ந்த அனைத்து பாடசாலை மாணவர்களுக்கான 6,8,10,12,14,16,18 வயதுக்குட்பட்ட மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களுக்கான (திறந்த சுற்றுப் போட்டிகள்) தனித்தனிப் போட்டிகளாக நடைபெறும்.

இச்சதுரங்கச் சுற்றுப்போட்டிகள் எதிர்வரும் 16.01.2014 தொடக்கம் 21.02.2014 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியானது கோட்டம், வலயம், மாவட்டம், மாகாணம் என நடைபெறும். கோட்ட மட்டப் போட்டிகள் 16.01.2014 தொடக்கம் 28.01.2014 வரையும் அதில் தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்களுக்கு 30.01.2014 தொடக்கம் 09.02.2014 வரை வலயமட்டப்போட்டிகளும், 10.02.2014 தொடக்கம் 14.02.2014 வரை மாவட்ட மட்டப் போட்டிகளும் நடைபெறும். இறுதியாக மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்களுக்கு இறுதிச்சுற்றுப் போட்டி மாசி மாதம் 19,20,21 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறும்.

ஆர்வமுள்ள வடமாகாண சதுரங்க வீரர்கள் இச்சதுரங்கச் சுற்றுப் போட்டிக்கு தமது அதிபர் ஊடாக பதிவுகளை மேற்கொள்ளலாம். திறந்த சுற்றுப்போட்டியாளர்கள் கீழுள்ள படிவத்தை பிரதி செய்து தபால் மூலமாகவோ, நேரடியாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ ( nogovernortrophy@gmail.com ) தை மாதம் 9ம் திகதி முதல் அனுப்பி வைக்கவும். இம்மாபெரும் சுற்றுப்போட்டிக்கு 3000 சதுரங்க போட்டியாளர்கள் பங்கு பற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புகளுக்கு

சி.வித்தியாரணி
ஆளுநர் செயலகம்,
வடமாகாணம்.
TP.021-2220660

Related Posts