வட மாகாண அமைச்சு உதவவில்லை! சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வீரர் ஆதங்கம்

தாய்லாந்தில் இடம்பெறவுள்ள 100 கிலோ மீற்றர் அஞ்சல் மரதன் ஓட்டத்தில் பங்கேற்க செல்லும் வீரருக்கு வட மாகாண விளையாட்டுத்துறை அமைச்சு எவ்வித உதவிகளையும் செய்யாத நிலையில் சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்காக சென்றுள்ள சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த குமார் நவநீதன் என்ற வீரர் எதிர்வரும் 20ம் திகதி தாய்லாந்தில் இடம்பெறவுள்ள தாய்லாந்து பாங்கொக் சர்வதேச தடகள போட்டியில் 100 கிலோமீற்றர் அஞ்சல் மரதன் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

வட மாகாணத்தில் இருந்து தெரிவாகியுள்ள இவ் வீரர் இலங்கையில் இருந்து செல்லவுள்ள நான்கு வீரர்களில் ஒரேயொரு தமிழ் வீரராகவும் உள்ளார்.

இந் நிலையில் இவ் வீரர் பயிற்சி மற்றும் பயணச் செலவுகளை ஏற்படுத்தி தருமாறு வட மாகாண விளையாட்டுத்துறை அமைச்சுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக கடிதம் மூலம் தெரிவித்தும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றார்.

இதேவேளை தனக்கு தனிப்பட்ட சிலரின் உதவி மூலமாகவே நிதி உதவி கிடைத்துள்ளதாகவும் அது தனது பயிற்சிக்கும் பயணத்திற்கும் போதுமானதாக இல்லை எனவும் தெரிவிக்கின்றார்.

தந்தையை இழந்து 5 சகோதரங்களுடன் தாயின் துணையில் வாழும் 28 வயதான இவ் வீரர் சர்வதேச மட்டத்தில் ஜொலிப்பதற்கு வட மாகாண விளையாட்டுத்துறை உதவவேண்டும் என எதிர்பார்த்தும் கைகூடாத நிலையில் இவ் வீரர் நேற்று வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணமாகியுள்ளார்.

Related Posts