வட மாகாணத்தில் நிலவும் வெற்றிடங்கள் குறித்த தகவல் கோரல்

வடமாகாண அமைச்சுக்களில் நிலவும் வெற்றிடங்களின் முழு விபரத்தையும் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு வடமாகாண சபையின் அவைத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வடமாகாண சபையின் அவைத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அமைச்சுக்களின் செயலாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 27 ஆம் திகதி முதல் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைகள் மனிதாபிமானத்துடன் அணுக வேண்டியுள்ளது.

பட்டதாரிகளின் நியமனம் மத்திய அரசைச் சார்ந்திருந்தாலும், மாகாண சபை சார்ந்த பட்டதாரி நியமனங்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு துரிதகதியில் நடவடிக்கை எடுத்தல் அவசியமாகின்றது.

எனவே, அமைச்சுக்களில் உள்ள பட்டதாரி நியமனங்களின் வெற்றிடங்களின் முழு விபரத்தையும் ஒன்று திரட்டி, அவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் எடுக்கும்படியும், அவற்றின் முழு விபரங்களையும் தருமாறும் அவைத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Posts