வட மாகாணத்தில் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரிப்பு

வட மாகாணத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டை விட 2018 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக நன்நடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள புள்ளி விபரம் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சிறுவருக்கெதிரான வன்முறைச்சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் வட மாகாணத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டதாக யாழ் மாவட்டத்தில் 26 சிறுவர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 15 சிறுவர்களும், மன்னார் மாவட்டத்தில் 20 சிறுவர்களும், வவுனியா மாவட்டத்தில் 12 சிறுவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 32 சிறுவர்களுமாக மொத்தமாக 105 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முயற்சி மேற்கொண்டதில் யாழ் மாவட்டத்தில் 10 சிறுவர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 03 சிறுவர்களும், மன்னார் மாவட்டத்தில் 05 சிறுவர்களும், வவுனியா மாவட்டத்தில் 02 சிறுவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 27 சிறுவர்களுமாக மொத்தம் 47 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

உடல் ரீதியான முறைகேட்டுக்கு உட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டதாக யாழ் மாவட்டத்தில் 11 சிறுவர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 18 சிறுவர்களும், மன்னார் மாவட்டத்தில் 12 சிறுவர்களும், வவுனியா மாவட்டத்தில் 05 சிறுவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 45, சிறுவர்களுமாக மொத்தம் 91 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

உள ரீதியான துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டதாக மன்னார் மாவட்டத்தில் 06 சிறுவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 07 சிறுவர்களுமாக மொத்தம் 19 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்கொலைக்கு முயற்சி செய்ததாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும் மன்னார் மாவட்டத்தில் 07 சிறுவர்களும், வவுனியா மாவட்டத்தில் ஒருவரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 19 சிறுவர்களுமாக மொத்தம் 27 சிறுவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் 03 சிறுவர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 02 சிறுவர்களும் கடந்த வருடம் தற்கொலை செய்துகொண்டதாக பதிவாகியுள்ளது.

உறவினர்களால் புறக்கணிக்கப்பட்ட சிறுவர்கள் என யாழ் மாவட்டத்தில் 09 சிறுவர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 21 சிறுவர்களும், மன்னார் மாவட்டத்தில் 04 சிறுவர்களும், வவுனியா மாவட்டத்தில் 04 சிறுவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 29 சிறுவர்களுமாக மொத்தம் 67 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என பதிவாகியுள்ளது.

மேலும் யாழ் மாவட்டத்தில் 02 சிறுவர்களும், மன்னார் மாவட்டத்தில் 04 சிறுவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 05 சிறுவர்களுமாக 11 சிறுவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு கடத்தப்பட்டுள்ளதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் கடந்த 2017 ஆண்டு புள்ளி விபர தகவலின் படி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு 123 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முயற்சி மேற்கொண்டதில் 38 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மேலும் உடல் ரீதியான முறைகேட்டுக்கு உட்படுத்தப்பட்டு 67 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உள ரீதியான துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு 39 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 14 சிறுவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 03 சிறுவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

உறவினர்களால் புறக்கணிக்கப்பட்ட சிறுவர்கள் என 67 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 11 சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த புள்ளிவிபரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts