வட மாகாணத்திலும் 12.30 மணியுடன் பாடசாலைகளை மூடுமாறு கோரிக்கை

நாடளாவிய ரீதியில் தற்போது நிலவி வரும் கடுமையான வெப்பம் காரணமாக, வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளை பகல் 12.30 மணியுடன் மூடுவது தொடர்பில் பல்வேறு தரப்பினரால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வட மாகாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக பாடசாலை கட்டடங்களுக்குள் இருந்து மாணவர்களால் கல்வி பயில முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வன்னிப் பகுதியிலுள்ள பாடசாலைகள், இந்த வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு, மாணவர்கள் வகுப்பறையும் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களும் கல்வி போதிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள பாடசாலைகளை காலை 7.30 மணிக்கு திறந்து மீண்டும் பிற்பகல் 12.30 மணிக்கு மூடுமாறு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தால் கோரிக்கை விடப்பட்டது.

அந்தக் கோரிக்கைக்கமைய கிழக்கு மாகாண பாடசாலைகள் இன்று செவ்வாய்க்கிழமை (03) முதல் அமுலுக்கு வரும் வகையில், 12.30 மணியுடன் மூடப்படவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

ஆனால், வடக்கு மாகாண கல்வியமைச்சு இந்த பிரச்சினை தொடர்பில் இன்னும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும எடுக்கவில்லை. இந்த வெப்பம் காரணமாக அண்மையில், பாடசாலை வகுப்பறையொன்றில் ஆசிரியர் ஒருவர் மயங்கி விழுந்தார். மாணவர்களும் சோர்ந்த நிலையில் பாடசாலைகளில் இருப்பதாக அதிகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு மேலதிகமாக வன்னியிலுள்ள பல பாடசாலைகளில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts