வட.மாகாணசபை உறுப்பினருக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

வட.மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனுக்கு எதிராக இன்று (திங்கட்கிழமை) வவுனியா வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த வியாழக்கிழமை வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின்போது பிரதேச செயலாளருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து வட.மாகாணசபை உறுப்பினர் கூட்டத்தில் இருந்து வெளியேறியிருந்தார்.

இதன்போது பிரதேச செயலாளரை அச்சுறுத்தும் விதமாக குறித்த மாகாணசபை உறுப்பினர் செயற்பட்டதாகத் தெரிவித்தே இன்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் குறித்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் ‘லிங்கநாதனே இது ஒன்றும் உங்கள் மாளிகை அல்ல’, ‘சபை பேச்சறிந்து பேசுங்கள்’, ‘அரச பணி மக்கள் பணி எமக்கு வேண்டாம் உங்கள் உரவல் பணி’, ‘அரச அதிகாரிகள் அச்சுறுத்தல் இன்றி பணியாற்ற இடமளியுங்கள்’, ‘உங்கள் அரசியல் இங்கு வேண்டாம்’ போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியிருந்ததுடன், அவருக்கு எதிரான கோசங்களையும் எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts