வட மாகாணசபையின் நிகழ்வை ‘புறக்கணித்த’ மத்திய அரச அதிகாரிகள்

வடக்கு மாகாணசபையின் குறைநிவர்த்திக்கான முதலாவது நடமாடும் சேவையை வவுனியா மாவட்ட அரசாங்க அதிகாரிகள் (மத்திய அரசு அதிகாரிகள்) வெள்ளியன்று புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

vigneswaran

வவுனியா மாவட்ட செயலகத்துடன் இணைந்து இந்த நடமாடும் சேவையை வடக்கு மாகாணசபை ஏற்பாடு செய்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், கடைசி நேரத்தில் வவுனியா அரசாங்க அதிபர் தலைமையிலான அதிகாரிகள் இதில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்திருந்ததாக வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா நெடுங்கேணி பிரதேச செலயகத்திற்கு உட்பட்ட புளியங்குளத்தில் இந்த நடமாடும் சேவை, வெள்ளி மற்றும் சனி ஆகிய இரண்டு தினங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டபோது, வவுனியா அரசாங்க அதிபர் தனது அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்திருந்ததாகவும் அமைச்சர் சத்தியலிங்கம் கூறினார்.

ஆயினும், எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள மரம் நடும் வைபவ நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும் பணியில் அதிகாரிகளுக்கு முக்கிய பணிகள் வழங்கப்பட்டிருப்பதனால், இந்த நடமாடும் சேவையில் கலந்து கொள்ள முடியாதிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் காரணம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் வடமாகாண அமைச்சர் சத்தியலிங்கம் கூறினார்.

மத்திய அரச நிர்வாகத்திற்கு உட்பட்ட அதிகாரிகள் இந்த நடமாடும் சேவையைப் புறக்கணித்திருப்பது குறித்து கருத்து வெளியிட்ட வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மத்தியிலே அதிகார பலத்தில் இருக்கும் நிலையில் வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாததாலும், வடமாகாண சபையைத் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவுமே மாகாணசபையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு மறுக்கப்படுகின்றது என்று கூறினார்.

அத்துடன் அரசுக்கும் மாகாண சபைக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகமாகி இடைவெளியும் அதிகரித்திருப்பது குறித்து வருத்தம் வெளியிட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன், தாம் சட்டரீதியாக, ஜனநாயக முறையில் முடிந்த அளவு ஒத்துழைப்பு வழங்குகின்ற போதிலும், அரச தரப்பினரே தங்களைப் புறக்கணித்திருப்பதாகவும் இரு தரப்பினருக்கும் இடையில் சுமுக உறவு ஏற்படுவதற்கு அரசாங்கமே தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஆயினும், திட்டமிட்டபடி இந்த நடமாடும்சேவை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை புளியங்குளம் இந்துக் கல்லூரியில் ஆரம்பமானது.

இதில் வடக்கு மாகாணசபை அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டு முதலமைச்சரினதும், மாகாண அமைச்சர்களினதும் தலைமையில் நடமாடும் சேவைக்கு வருகை தந்திருந்த பொதுமக்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்திருந்தனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வடக்கு விஜயத்தை முதலமைச்சர் விக்னேஸ்வரன் புறக்கணித்திருந்தார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது

Related Posts