வட மாகாணசபையின் ஆலோசனை பெறாது காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கி வைப்பு

வட மாகாண சபையினது எந்தவொரு ஆலோசனைகளையும் பெறாது அரசியலமைப்பை மீறியே கிளிநொச்சியில் 20 ஆயிரம் காணி உரிமைப்பத்திரங்களை அரசு வழங்கியுள்ளது. இது சட்டத்துக்கு முரணானது. – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தது.

sumantheran

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் அரச காணிகளை பராதீனப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்ற போதிலும், அவ்விடயத்தில் குறித்த மாகாண சபையின் ஆலோசனையைப் பெற்றே அதனை மேற்கொள்ள வேண்டும். எனினும், கிளிநொச்சியில் காணி உறுதி வழங்கலின்போது சட்டம் பின்பற்றப்பட்டிருக்கவில்லை. வடமாகாண சபையிடம் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்றும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியது.

நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) சட்டமூலம் இங்கு சமர்ப்பிக்கப்பட்டு காணி தொடர்பான தேசியக் கொள்கை பற்றி பேசப்படுகின்றது. இருப்பினும், காணி தொடர்பான தேசியக் கொள்கை மத்திய அரசுக்கு உரித்துடையதல்ல. இது அரசியலமைப்பின் பிரகாரமானதாகும். தேசியக் கொள்கை எனும் பொது முதலில் தேசிய காணி ஆணைக்குழு இருக்கவேண்டும். 1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் இணைப்பின் பிரகாரம் தேசிய காணி ஆணைக்குழு இலங்கையில் இல்லை. எனவே, காணி தொடர்பான தேசியக் கொள்கை அரசியலமைப்புக்கு முரணானதாகும்.

தேசிய காணி ஆணைக்குழுவின் மூலமே தேசிய காணிக் கொள்கை வரையப்படவேண்டும். மாறாக, அது அமைச்சர்களுக்குரிய விடயமுமல்ல, பொறுப்புமல்ல. இவ்வாறன நிலையில் இதனைப் பாரதூரமான அரசியலமைப்பு மீறலாகவே கொள்ளவேண்டும்.

தேசிய காணிக் கொள்கையை வரைய வேண்டியவர் யார் என்பது குறித்து அரசியலமைப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோன்று மாகாண சபைகளே அதிகாரப் பகிர்வுகளைப் பேணவேண்டும். கிளிநொச்சியில் 20 ஆயிரம் காணி உரிமங்கள் அரசாங்கத்தினால் பகிர்ந்தளிக்கப்பட்டன. இது குறித்து இன்று இன்று ஆளுந்தரப்பு புகழாரம் சூட்டிக் கொள்கிறது. ஆனல் அங்கு காணி உரிமைப் பத்திரங்கள் வழங்கப்பட்ட விடயத்தில் அரசியலமைப்பு அப்பட்டமாக மீறப்பட்டிருக்கின்றது. அரசு தனக்குத் தேவையான தெரிவுகளையே மேற்கொண்டிருக்கிறது” – என்றார்.

Related Posts