வடக்கு கிழக்கில் வாக்காளர் பதிவுகளை உரிய முறையில் பதிவு செய்வதில் அக்கறையின்மை காணப்படுவதாக வட மாகாண சபையின் முன்னாள் பிரதம செயலாளர் எஸ்.ரங்கராஜன் தெரிவித்தார்.
அதனால், வாக்காளர் பதிவுகளை மேற்கொள்வதற்கு முன்னுரிமை கொடுத்து கடமைகளை நிறைவேற்ற கிராம அலுவலர்களும் பிரதேச செயலாளர்களும் முன்வர வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வாக்காளர் விழிப்புணர்வு வாரத்தையொட்டி யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பகல் விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்று நடைபெற்றது.
யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபிணி வரதலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில், யாழ் மாவட்ட பிரதேச செயலாளர்கள், நிர்வாகிகள், கிராம அலுவலர்கள், பிரதேச செயலகங்களில் தேர்தல் கடமையாற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள், நிர்வாக அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
இதன்போது உரையாற்றிய எஸ்.ரங்கராஜன் தொடர்ந்து கூறுகையில், ‘சமூக மட்டத்தில் அபிவிருத்தியைக் கொண்டு வரும் கடமையும் பொறுப்பும் அரச அலுவலர்களுக்கு உரியதாகும்.
வாக்காளர் பதிவுகளை உரிய முறையில் பதிவு செய்வதற்கு வேண்டிய கடமைகளை கிராம அலுவலர்களும் பிரதேச செயலாளர்களும் முன்னரிமை கொடுத்து மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்’ என்றார்.
தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் இந்தப் பணியை புனிதமான பணியாக மேற்கொள்கின்றாக்கள். பிரதேச செயலாளர்களும் கிராம அலுவலர்களும் முன்னரிமை கொடுத்து இப்பணியை மேற்கொள்வதுடன் பொதுமக்களும் ஆர்வத்துடன் செயற்படுகின்றார்கள்.
வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் இந்த விடயத்தில் அக்கறை காட்டுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகின்றது. இதனை ஊக்குவிக்க வேண்டியது அரச அலுவலர்களின் கடமையாகும்’ எனவும் அவர் தெரிவித்தார்