மோதல் நடைபெற்ற பிரதேசங்களில் அதிகளவு தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டியது அவசியம் என உலகவங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் உலகவங்கி நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள இடைக்கால அபிவிருத்தி அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கடந்த வருடத்தில் இயற்கை அனர்த்தங்களுக்கு மத்தியிலும் இலங்கை அரச வருமானம் ஈட்டுவதில் முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது.
முதல்தடவையாக சில சாதகமான விடயங்களை பொருளாதாரம் கொண்டிருப்பதுடன், இலங்கையில் மேலும் அதிகளவு சிறந்த தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு குறைவடைந்துவரும் பெண்களின் தொழிற்படை பங்களிப்பு தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும்.
மேலும் தற்போதைய நிலமையில் இலங்கையில் பெண்களின் தொழிலில் ஈடுபடும் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக ஆய்வுகளில் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதனால் பெண்களை தொழில்படையில் சேர்த்துக்கொள்ளும் செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் ஆராய வேண்டும். நாட்டில் மாகாணங்களுக்கிடையில் காணப்படும் வருமான இடைவெளிகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தொழிலாளர் படையில் யுத்தத்தின் பாதிப்பு இன்னும் காணப்படுகின்றது. இதனால் இந்த இரண்டு மாகாணங்களிலும் வேலையின்மை வீதம் அதிகமாகவே காணப்படுகின்றது.
இலங்கையைப் பொறுத்தவரையில் புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவது மிகவும் அவசியமாக இருக்கிறது. அனைவரும் வைத்தியர்களாகவும், சட்டத்தரணிகளாகவும் அரசதுறை ஊழியர்களாகவும் பதவி பெறவேண்டுமென எண்ணும் கலாசாரம் மாறவேண்டும்.
விஞ்ஞான தொழில்நுட்ப அடிப்படையில் அதிகளவான புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்க முடியும். இது தொடர்பில் நாட்டின் கொள்கை வகுப்பாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் கல்வித்துறையானது இந்தப் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் புத்தாக்கங்களுக்கும் வழிசமைப்பதாக அமையவேண்டும்.
புதிய தொழில்நுட்ப ஆற்றல்களை உள்வாங்க வேண்டும். புத்தாக்கத்தை நோக்கிச் செல்லும் போது தோல்விகளும் வலிகளும் ஏற்படலாம். அந்த நேரத்தில் யாரும் துவண்டுவிடக்கூடாது’ என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.