வட, கிழக்கிற்கான காணிச் சுற்றுநிருபத்தை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு

தேசிய பாதுகாப்பு மற்றும் விசேட அபிவிருத்தி திட்டங்கள் தவிர ஏனைய நோக்கங்களுக்கு காணிகள் விநியோகிப்பதை தற்காலிகமாக தடைசெய்வதான சர்ச்சைக்குரிய காணிச் சுற்றுநிருபத்தை வாபஸ் பெறுவதற்கு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அறிவித்தலை, சட்டமா அதிபரின் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் திருமதி முருது பெர்ணான்டோ இன்று வியாழக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்தார்.

இந்த சுற்றுநிருபமானது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கென விசேடமாக விடுக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுநிருபம் தேசிய பாதுகாப்பு மற்றும் விசேட அபிவிருத்தி திட்டங்கள் தவிர ஏனைய நோக்கங்களுக்காக காணிகளை விநியோகிப்பதை தற்காலிகமாக தடைசெய்திருந்தது.

இந்நிலையில், குறித்த காணிச் சுற்றுநிருபத்தை ரத்து செய்யுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மேல்முறையீட்டு நீதிமன்றில் ஆணைக்கோரும் விண்ணப்பமொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மன்றில் ஆஜரான சட்டமா அதிபரின் பிரதி சொலிஸ்டர் ஜெனரல், மேற்படி சுற்றுநிருபத்தை வாபஸ் பெறுவதான அறிவித்தலை விடுக்குமாறு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு தனக்கு ஆலோசனை வழங்கியதாக குறிப்பிட்டார்.

இதனையடுத்து, சுமந்திரன் எம்.பி. சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனகேஸ்வரன், ‘மேற்படி சுற்றுநிருபம் வாபஸ் பெறப்பட்டுள்ளதால், இந்த சுற்றுநிருபத்துக்கு எதிரான வழக்கினை வாபஸ் பெறுவதா? இல்லையா? என்பது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்’ என்று கூறினார்.

இதனைத்தொடந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணையினை எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Posts