வடக்கு, கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை. அங்குள்ள முகாம்கள் மற்றும் பிரதேசங்களின் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பான சகல விடயங்களும் உள்ளடங்கிய அறிக்கையொன்றை பாதுகாப்பு அமைச்சு கோரியுள்ளது என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
மேற்படி பிரதேசங்களின் நிகழ்கால மற்றும் எதிர்கால பாதுகாப்பு நிலைமை, பாதுகாப்புப் படையினர் நிலைகொண்டிருக்க வேண்டிய பிரதேசங்கள் எவை?, பாதுகாப்பு படையினர் அகற்றப்பட வேண்டிய பிரதேசங்கள், வடக்கில் கடமையாற்றுபவர்களை அங்கேயே கடமையாற்ற விடுவதா? இல்லை வேறு இடங்களுக்கு அவர்களை மாற்றுவதா உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்த பின்னரே இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு தீர்மானமொன்றுக்கு வரும் என பேச்சாளர் கூறினார்.
இதேவேளை, பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள ஆயிரக்கணக்கான காணிகளை பொதுமக்களிடத் கையளிப்பது தொடர்பிலும் பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.