யாழ்.வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியின் புதிய அதிபரை மாற்றுமாறு கோரி மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில் அதிபரை எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதியில் மாற்ற நடவடிக்கை எடுப்பார்கள் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து அந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வார காலமாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இதற்கு தீர்வுகாணுமாறு கோரி வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரனிடம் பெற்றோர்கள் இரண்டு முறைப்பாட்டு கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பியான சரவணபவன் கவனம் செலுத்தி நெற்று அவர் மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்துள்ளார்.
இதன்போது அங்கு பெற்றோர்கள் மத்தியில் சலசலப்பு நிலவியதுடன் உடனடியாக தமது கோரிக்கைகளுக்கு தீர்வு காணுமாறு அவரிடம் தெரிவித்துள்ளனர்.
தான் கல்வி அதிகாரிகளுடன் இது தொடர்பாக கலந்துரையாடினார் எனவும் இதன்போது அவர்கள் எதிர்வரும் மூன்று மாத காலத்தில் குறித்த அதிபரை மாற்ற நடவடிக்கையெடுப்பர் என உறுதியளித்ததாகவும் சரா எம்.பி. பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பெற்றோரினால் முன்னெடுக்கப்பட்ட ஆரப்பாட்டங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.