வட்டுக்கோட்டை இளைஞன் உயிரிழப்பு விவகாரம் : யாழ் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

வட்டுக்கோட்டை இளைஞன் பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண விசாரணை தொடர்பான கட்டளை எதிர்வரும் ஜனவரி 2ம் திகதி வழங்கப்படவுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன், பொலிஸாரின் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த நவம்பர் 19 ஆம் திகதி உயிரிழந்தார்.

இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த இளைஞன் உயிரிழப்பதற்கு முன்னர் அவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய பொலிஸார் மற்றும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட சிலர் சாட்சியம் வழங்கினர்.

மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த முன்னர் உயிரிழந்தவர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தெல்லிப்பழை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் ஆனந்தராஜா உத்தரவிட்டார்.

மேலும், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவில் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த நபரை அனுமதித்தமை தொடர்பான மருத்துவ அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு அவர் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார்.

மரண விசாரணை தொடர்பான கட்டளைக்காக எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கில் உயிரிழந்த இளைஞன் சார்பில் பெருமளவான சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

Related Posts