வட்டுக்கோட்டையில் படையினருடன் மக்கள் முறுகல்

attack-attackவீடுகளின் மீது கல்லெறிந்த படையினருடன் மக்கள் நியாயம் கேட்டுத் தர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் பெரும் களேபரம் மூண்டது.

இதனையடுத்துப் பொலிஸாரின் முன்பாகவே கொலை செய்துவிடுவோம் என்று இராணுவத்தினர் தம்மை மிரட்டினர் என்று மக்கள் தெரிவித்தனர். வட்டு வடக்கு, பிளவத்தைப் பகுதியில் நேற்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இந்தச் சம்பவத்தினால் அந்தப் பகுதியில் பெரும் அச்சநிலை தோன்றியுள்ளதுடன், இரவு முழுவதும் பதற்மான சூழலே நிலவியது.

பின்னனி குறித்த பகுதியிலுள்ள கேணியடியின் பின்பாக இராணுவ முகாம் அமைந்துள்ளது. குறித்த முகாமைச் சுற்றிலும் பொது மக்களின் வீடுகள் காணப்படுகின்றன. முகாமிலுள்ள இராணுவச் சிப்பாய்கள் அயலிலுள்ள வீடுகளில் பெண்கள் குளிக்கும் பொழுது எட்டிப் பார்ப்பது உள்ளிட்ட சில்மி­ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

கடந்த டிசெம்பர் மாதம் 13 ஆம் திகதி பெண் ஒருவர் குளிப்பதை இராணுவ சிப்பாய் ஒருவர் எட்டிப் பார்த்ததைத் தொடர்ந்து அங்கு திரண்ட மக்கள், சிப்பாயைப் பிடித்து முறையாகக் கவனித்தனர்.

அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கு வந்த இராணுவ முகாம் பொறுப்பதிகாரி, நடந்த சம்பவத்துக்கு மன்னிப்புக் கோரியதுடன், குறித்த முகாமிலிருந்து இராணுவச் சிப்பாய்களை உடனடியாக இடமாற்றம் செய்திருந்தார். அத்துடன் குறித்த இராணுவ முகாம் விரைவில் அகற்றப்படும் எனவும் உறுதியளித்திருந்தார்.

மீண்டும் திருகுதாளம் இதன் பின்னர் புதிதாக வந்த இராணுவத்தினரும் அங்குள்ள வீடுகளை எட்டிப் பார்ப்பது, முகாமுக்கு முன்பாகப் பெண்கள் தனித்திருக்கும் வீட்டுக்கு இரவில் சென்று ரோச்லைட் அடித்துப் பார்ப்பது என்று தொடர்ச்சியாகத் தங்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இவ்வாறானதொரு நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் முகாமைச் சுற்றி அமைந்துள்ள இரண்டு வீடுகளுக்கு இராணுவத்தினர் கல்லெறிந்ததாகவும் அதனையடுத்து அந்தப் பகுதியில் மக்கள் குழுமியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மக்களுக்கும் இராணுவத் தினருக்கும் இடையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்ட நிலையில் அங்கு வாகனத்தில் ரோந்து சென்ற பொலிஸார் வந்தனர். உங்களைக் கொல்லுவோம் என்று பொலிஸாருக்கு முன்பாகவே படையினர் தம்மை மிரட்டியதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்து அவர்கள் மிரட்டியதாகவும், ஒரு கட்டத்தில் நாங்கள் முகாமை விட்டுவிட்டு வெளியேறுகின்றோம்.முகாமுக்கு ஏதாவது நடந்தால் நீங்கள் அனைவரும்தான் பொறுப்பு என்று சொல்லிவிட்டு மோட் டார் சைக்கிளில் இராணுவத் தினர் ஓடித் தப்பியுள்ளனர் என்றும் மக்கள் கூறினர்.

இராணுவத்தினர் வேண்டு மென்றே தமது முகாமைத் தாமே ஏதாவது செய்து விட்டு எங்களை எதுவும் செய்யக் கூடும். எனவே பொலிஸார் பாதுகாப்புக்கு வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதனை உதா சீனம் செய்த பொலிஸார், தாம் தொடர்ச்சியாக ரோந்து வருவோம் என்றும் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு பதிவு செய்யு மாறும் கூறி விட்டுச் சென்று விட்டனர்.

இதனையடுத்து வட்டுக் கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு செய்யச் சென்றபோதும், பொலிஸார் முறைப்பாட்டை ஏற்க மறுத்துள்ளனர் எனவும் அத்துடன் முறைப்பாடு பதிவு செய்ய மறுத்தமைக்கு எந்தக் காரணமும் தெரிவிக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் மேலும் கூறினர்.

மீளத்திரும்பிய இராணுவம் வெளியேறிச் சென்ற இராணுவத்தினர் இரண்டு மணித்தியாலங்களில் மீளவும் முகாமுக்கு வந்துள்ளனர். அங்கு நின்ற மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியவற்றின் இலக்கங்களைப் பதிவு செய்துள்ளனர். அதன் பின்னர் முகாம் வாசலிலேயே அவர்கள் இருந்தனர். இராணுவத்தினர் மீளத் திரும்பி வந்ததைத் தொடர்ந்து அந்தப் பகுதி மக்கள் கலைந்து சென்றுள்ளனர். இருப்பினும் தமக்கு ஏதாவது நடக்குமா என்ற அச்சத்துடன் இரவுப்பொழுதை கழிக்க வேண்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Related Posts