வட்டுக்கோட்டையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல்!

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் ஒருவர் மீதும் அவரது மகன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து கடந்த சனிக்கிழமை முற்பகல் குறித்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய பெண்ணும், அவரது ஆறு வயது மகன் மீதுமே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த குடும்ப பெண் நேற்று முன்தினம் தனது ஆறு வயது மகனுடன் வட்டுக்கோட்டை – கோட்டைக்காடு வைத்தியசாலைக்கு சாதாரண சிகிச்சைக்கு சென்று வீடு திரும்பும் போதே அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இனம் தெரியாத கும்பல் அவர்களை வழி மறித்து இரும்புக் கம்பிகள் மற்றும் தடிகள் போன்றவற்றால் தாக்கப்பட்டதால் குறித்த பெண் தலையில் படுகாயமடைந்த நிலையில் அவ்விடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

இந்நிலையில், படுகாயமடைந்த பெண்ணையும் அவரது மகனையும் பிரதேச மக்கள் கோட்டைக்காடு வைத்திய சாலையில் அனுமதித்தனர்.இதன்பின்னர் குறித்த பெண் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த 1996ஆம் ஆண்டு நாவற்குழி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட 24 இளைஞர்கள் காணமல் ஆக்கப்பட்டனர்.

அது தொடர்பில் யாழ்.மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டு அது தொடர்பிலான வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகின்றது.

குறித்த வழக்கில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளுக்கு உதவியாளராகவே குறித்த பெண் செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts