வட்டுக்கோட்டையில் அரசாங்க வேலைவாய்ப்புகளை பெற்று தருவாதாக பெண்களை எமாற்றியவர் கைது

arrest_1அரசாங்க வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி இளம் பெண்களை ஏமாற்றி வந்த நபர் ஒருவர் இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் வட்டுகோட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேற்படி நபர், அராலி சித்தன்கேணிப் பகுதியில் வறுமைக்கோட்டின் கீழ் படித்துவிட்டு வேலையற்று இருக்கும் யுவதிகளின் வீடுகளுக்குச் சென்று, தான் அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்கவர் எனவும் அரசாங்க வேலை வாய்ப்புகளை தன்னால் பெற்றுத் தரமுடியும் என்றும் கூறி யுவதிகளை ஏமாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றிற்கு சென்று உடனடியாக வேலை பெற்றுத் தருவதாகக் கூறி இளம் யுவதி ஒருவரை தான் வந்த முச்சக்கர வண்டியில் அழைத்துச்சென்றுள்ளார்.

குறித்த யுவதியை மாதகல் உட்பட பல இடங்களுக்கு அழைத்துச் சென்றுவிட்டு இறுதியாக சித்தன்கேணி சந்தியில் இறக்கிவிட்டு மேற்படி நபர் தப்பிச் சென்றுள்ளார்.

இதேவேளை, கடந்த சனிக்கிழமை காலை வேறொரு முச்சக்கர வண்டியில் வந்த குறித்த நபர் வேலை பெற்றுத் தருவதாக கூறி மற்றுமொரு பெண்ணை அழைத்துச்செல்ல முயன்றுள்ளார்.

இந்நிலையில் மேற்படி நபரின் செயற்பாடுகள் தொடர்பில் ஏற்கனவே கதை பரவிய நிலையில் குறித்த நபரை மடக்கி பிடித்த இளைஞர்கள் அவருக்கு நன்கு பாடம் புகட்டியதுடன் வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நபர் தென்மராட்சி மீசாலை பகுதியை சேர்ந்தவரென்றும் தற்போது அவர் யாழ்ப்பாணத்தில் வசித்து வருவதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts