வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக விசாரணை கோரி மாகாண சபையில் கூட்டமைப்பின் புளட் உறுப்பினர் லிங்கநாதனால் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் இன்று (9) நடைபெற்றது.
அதன்போது, இரணைமடு நீர்ப்பாசன திட்டம் தொடர்பிலான செயற்பாடுகள், பார்த்தீனிய ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகள் , பளை பிரதேசத்தில் நிறுவப்பட்ட காற்றாலை தொடர்பிலான விடயம்,சுன்னாக நிலத்தடி நீர் தொடர்பிலான செயற்பாடுகள், மருதங்கேணி கடல் நீரை நன்னீர் ஆக்கும் செயற்பாடு, கார்த்திகை மர நடுகை, அனர்த்த நிவாரண விநியோகம், உழவர் திருநாள், மலர்க்கண்காட்சி, விவசாய தினம், மண் தினம் , போன்றவை தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களுக்கு உரிய முறையில் அறிவிக்காமல் நடாத்தியமை மற்றும் இந்த விழாவுக்கான செலவீனங்களை வெளிப்படுத்தாமை, கூட்டுறவு துறையில் உள்ள முறைகேடுகளை சீராக்காமை, விவசாய துறையில் பல செயற்திட்டங்களை முன்னெடுக்காமை,
சிறு குளங்களை புனரமைக்க மத்திய அமைச்சு அழைத்த போது அதனை நிராகரித்தமை, மற்றும் வவுனியா மாவட்டம் தொடர்ந்து விவசாய அமைச்சினால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றமை, போன்ற பல்வேறு முறைகேடுகளில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஈடுபட்டதாக மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் பிரேரணை ஒன்றினை மாகாண சபையில் முன் மொழிந்தார்.
அத்துடன் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விவசாய அமைச்சர் மீது விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி பிரேரணையை சமர்ப்பித்தார்.
இவரது பிரேரணைக்கு ஆதரவாக சுகிர்தன் , சயந்தன் ,ஆர்னோல்ட் மற்றும் தியாகராஜா ஆகியோர் உரையாற்றினர். இதே வேளை மேற்படி பிரேரணையில் குறிப்பிடப்பட்ட நிகழ்வுகளில் மாகாணசபையின் உறுப்பினர்கள் பலரும் கலந்து உரையாற்றி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வழமையான நடைமுறைக்கு மாறாக நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாமலும் அவசர பிரேணைக்குரிய முன்னறிவித்தல் கூட கொடுக்கப்படாமலும் இரகசியமாக இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இருந்த பொழுதிலும் அவைத்தலைவர் அமைச்சருக்கெதிரான இந்த பிரேரணையினை ஏற்றுக்கொண்டிருந்தமை உள்நோக்கம் கொண்டதாக இருந்ததாக அமர்வில் கலந்து கொண்டிருந்த பெயர் குறிப்பிட விரும்பாத உறுப்பினர் ஒருவர் எமது தளத்திற்கு தெரிவித்திருந்தார்.
இன்று (9) நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் பிறந்தநாள் பரிசாக அமைச்சரின் மீதான இரகசியப்பாய்ச்சலுக்கு ஆதரவு திரட்டும் முகமாக US விடுதியில் நேற்று(8) நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரனின் செயற்பாட்டாளர்களான அரசியல் கைதிகளுக்காக காலை 8-12 வரை 4 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து விட்டு ஐஸ்கிறீம் அருந்தியதாக சர்ச்சைக்குள்ளாகிய சுகிர்தன் , விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் காணமால் போனோருக்கான விசாரணைக்குழுவில் மக்களை வாக்குமூலம் வழங்கச்சொல்லிதாக சர்சைக்குள்ளாகியிருந்த சயந்தன், மைத்திரியின் இல்லத்தில் குடும்பத்துடன் நத்தார் விருந்துண்டு மகிழ்ந்ததால் சர்சைக்குள்ளாகிய ஆர்னோல்ட் ஆகியோர் கூடி திட்டம் தீட்டியதாகவும் அந்த சந்திப்பில் விந்தன் கனகரட்ணத்தின் ஊடாகவே குறித்த பிரேரணையினை கொண்டு வரத்திட்டமிட்டிருந்ததாகவும் எனினும் கடைசி நேரத்தில் அவர் மறுத்துவிடவே அதனை லிங்கநாதன் மற்றும் தியாகராஜா ஆகியோரில் ஒருவரை பயன்படுத்துவது என முடிவு செய்யப்பட்டதாகவும் எமக்கு கிடைத்த இரகசியத்தகவல்கள் மூலம் தெரிய வருகின்றது.
அவர்கள் ஏற்கனவே மகிந்த அணிக்காக வேலை செய்வதற்காக 3 கோடி ரூபாவுக்காக தேர்தல் நேரத்தில் பசிலுடன் பேரம் பேசியதாக இணையத்தளங்களில் சர்ச்சைக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சுமந்திரன் அணியினரின் வடமாகாண சபை அமைச்சரவை மாற்றுத்திட்டத்தின் ஒரு பகுதியாக லிங்கநாதனுக்கு விவசாய அமைச்சர் பதவி வழங்குவதற்கு கொள்கையளவில் ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இரகசியத்தகவல்கள் தெரிவிக்கின்றன.அதற்கு கைமாறாகவே இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தமிழ்மக்கள் பேரவை சர்சையில் முதலமைச்சருக்கு பெரிதும் பக்க பலமாக தொழிற்பட்டுகொண்டிருப்பவராக அமைச்சர் ஐங்கரநேசன் இருக்கிறார் .முதலமைச்சரை தீர்வுத்திட்ட நகல் வெளியீட்டு விழாவுக்கு செல்ல வேண்டாம் என்று கோரும் கடித்தில் அவர் கையெழுத்திட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஊழல்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்குள்ளாக்கப்பட்டுள்ள கல்வி மற்றும் சுகாதார அமைச்சர்களுக்கு எதிராக எந்தவித பிரேரணைகளோ அல்லது கேள்விகளோ மாகாணசபை உறுப்பினர்க்ளால் முன்வைக்கப்பட்டிராத நிலையில் மிகவும் நேர்த்தியாக திட்டங்களையும் செயற்பாடுகளையும் கொண்டு நடாத்துவதிலும் , இயற்கை வளங்களை பாதிக்கும் மூங்கில் காடு வளர்ப்பு நடவடிக்கைகளையும் தொழிற்சாலைகளை அமைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் கார்த்திகை மர நடுகை வாரம் போன்ற தமிழ்த்தேசியத்தினை முன்னிறுத்தும் நடவடிக்கைகளிலும் முன்னின்று செயற்படும் அமைச்சர் ஐங்கரநேசனை குறி வைத்திருப்பது சுமந்திரன் அணியினரின் முதலமைச்சர் மீதான தாக்குதலுக்கான முன்னகர்வாக நோக்கப்படுகின்றது.
ஏற்கனவே எதிரக்கட்சி தலைவரின் பிறந்தநாள் பரிசாக ஈபிஆர் எல் எப் சிவமோனை தமிழரசுக்கட்சிக்குள் உள்வாங்கிய தழரசுக்கட்சி , சுமந்திரனின் பிறந்தநாள் பரிசாக ஐங்கரநேசன் மீதான குற்றச்சாட்டுக்கள் மூலமாக முதலமைச்சருக்கு அச்சுறுத்தலை வழங்குதல் புளட் அமைப்புக்குள் விரிசலை ஏற்படுத்தி லிங்கநாதனை அதில் இருந்து விலத்தி தமிழரசுக்கட்சிக்குள் உள்வாங்குவதல் என்ற ஒரே கல்லில் இரண்டு மாங்காய் நகர்வினை செய்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத சபை உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
இன்றைய இந்த பிரேரணை முன்மொழிவின் போது சபையில் முதலமைச்சர் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாகவே அவர் வெளியேறியிருந்தார் .அவைத்தலைவர் இது தொடர்பில் முதலைமைச்சர் விசாரணை செய்வார் என்று மட்டும் தெரிவித்தார்.
இதன்போது உரையாற்றிய எதிர்கட்சி உறுப்பினர் தவநாதன். அவைத்தலைவரை சாடினார்.அவர் மேலும் கூறுககையில் “பாவம் மக்கள் ” எனும் கவிதை தொகுப்பு நூல் ஒன்று 1984 ம் ஆண்டு கால பகுதியில் வெளியாகி இருந்தது. அதனை தேடிஎடுத்து மாகாண சபை நூலகத்தில் வைக்க வேண்டும். அக்கால பகுதியில் தமிழீழம் கோரி பல குழுக்கள்போராடினார்கள். அக்கால பகுதியில் இன்னமொரு கதைகூறுவார்கள், இவர்களிடம் தமிழீழத்தை கொடுத்து விட்டு பார்க்கவேண்டும் என அது இங்கு நடக்கும் செயலை பார்க்கும் போதுஎனக்கு நினைவுக்கு வந்தது.
வடமாகாண அவைத்தலைவர் கூறுவார் இங்கே எதிர்க்கட்சிஇல்லை , அனைவரும் ஆளும் கட்சியே என்று , ஆனால் ஆளும்கட்சிக்குள்ளே கருத்து முரண்பாடுகள் இருக்கின்றது. உட்கட்சிமோதல்கள் நடைபெறுகின்றன. அதனால் அமர்வின் நேரம் வீணாகின்றது.
சபை அமர்வின் முதல் நாள் ஆளும் கட்சி கூட்டம் நடைபெறும்,அங்கு இந்த விடயங்களை பேசி முடிவெடுக்கலாம். இந்த சபை திறம்பட இயங்க வேண்டுமாயின் பிரச்சனைகளை அந்த அந்த மட்டத்திலேயே முடிக்க வேண்டும்.
மக்களுடைய பிரச்சனை தொடர்பில் விபரங்களை உறுப்பினர் து.ரவிகரன் சபையில் எடுத்துக் கூறும் போது சுருக்கமாக சொல்லுங்கள் நேரம் செல்கின்றது என அவர் விபரத்தை முழுமையாக சொல்ல விடாத அவைத்தலைவர் கருத்து மோதலுக்காக பெருமளவான நேரத்தை ஒதுக்கி உள்ளார். எனதெரிவித்தார்.
மாகாண சபை உறுப்பினர் க.சர்வேஸ்வரன் உரையாற்றும் போது தற்போது வடமாகாண சபை தொலைக்காட்சி தொடர் நாடகங்கள்போன்று மாகாண சபையில் பிரச்சனைகள் ஒவ்வொரு பக்கத்தால் செல்கின்றது. இறுதியில் எந்த பிரச்சனைக்கும் முடிவு இல்லாமல் சபை ஒத்தி வைக்கப்டுகின்றது.
இனிவரும் காலத்தில் இவ்வாறு இல்லாமல் ஒரு பிரச்சனையைமையப்படுத்தி அது தொடர்பில் உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கவேண்டும் விவாதிக்க வேண்டும் அதற்கான முடிவுகள்எடுக்கப்பட வேண்டும்.
நீர் பிரச்சனை என்றால் அது தனியாக எடுக்கப்பட வேண்டும் அதேபோன்று மீள் குடியேற்ற பிரச்சனை என்றால் அது தனியா எடுத்துபேச வேண்டும்.
இன்றைய அமர்வில் இந்த பிரச்சனை தொடர்பில் பேசப்படும் என முன்னரே உறுப்பினர்களுக்கு அறிவித்தால் ஒவ்வொரு உறுப்பினர்களும் அந்த பிரச்சனை தொடர்பில் தமது பிரதேசம் எவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளது என்ற தகவல்கள் தரவுகளை பெற்று வந்து விவாதிக்க முடியும். அதன் ஊடாக அந்த பிரச்னைக்கு ஒரு முடிவு எட்டப்படும்.
அதனை விடுத்து ஒவ்வொரு அமர்விலும் ஏதோ ஒரு பிரச்சனை கதைக்க தொடங்கி அது வேறு பிரச்சனைக்கு சென்று அது வேறு வழியாக வேறு பிரச்சனையில் சென்று முடியும். இறுதியில் எந்த பிரச்சனைக்கும் தீர்வு இன்றி சபை ஒத்தி வைக்கப்படும்.அவ்வாறான செயற்பாடுகள் இனி வரும் காலத்தில் நடக்காது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாகாண சபை உறுப்பினர் சர்வேஸ்வரன் தெரிவித்தார்.
வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக உறுப்பினர்களால்முன் வைக்கப்பட்ட அனைத்து குற்ற சாட்டுக்களையும் விவசாயஅமைச்சர் பொ.ஐங்கரநேசன் மறுத்தார்.
அனைத்தும் தன் மீது அபாண்டமாக குற்றம் சாட்டபடுகின்றது.இது வேண்டும் என்றே என்மீது சேறு பூசும் நடவடிக்கை. யாருக்கோ முதுகு சொறிந்து விடுவதற்காக என் மீது குற்றம் சாட்டுகின்றார்கள்.
விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என கூறப்பட்டவிடயம் விவாதிக்கும் போது அதனை அவைத்தலைவர் தடுக்காது இருந்துள்ளீர்கள். பொது பிரச்சனை என கூறி என் மீதான குற்ற சாட்டுக்களை உறுப்பினர்கள் முன் வைக்க வேண்டும் என அவைத்தலைவர் செயற்பட்டு உள்ளீர்கள்.
அவைத்தலைவர் உங்களுக்கு கண்ணியமாக சபையை நடாத்த தெரியவில்லை. இந்த இரண்டரை வருடத்தில் அரை நாள்அமர்வை மாத்திரமே உப அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் நடாத்தி இருந்தார். அந்த அரை நாள் அமர்வு எவ்வளவோ கண்ணியமாக நடந்தது
இது வேணும் என்றே என் மீதான சேறு பூசும் நடவடிக்கைக்ககு அவைத்தலைவர் துணை போயுள்ளார் என்பது வெளிப்படையாக தெரிகின்றது. என விவசாய அமைச்சர்தெரிவித்தார்.
இரணைமடு நீரை யாழப்பாணத்திற்கு திருப்புவதற்கு கிளிநொச்சி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இத்திட்டத்திற்கு ஆதரவாக இன்று சபை உறுப்பினர் ஆர்னோல்ட் கூறிய கருத்து எதிர்க்கட்சித்தலைவரும் ஈபிடிபி கட்சி உறுப்பினருமான தவராசாவின் கருத்தை ஒத்திருந்தது.
அமைச்சர் தொடர்பிலான 5 உறுப்பினர்களின் குற்றச்சாட்டுக்கள் மீதும் பிரேரணை மீதும் முதலமைச்சர் எடுக்கவுள்ள நடவடிக்கையிலேயே அமைச்சரின் எதிர்காலம் தங்கியுள்ளது எனலாம்.அமைச்சரவை மீதான முழு அதிகாரமும் முதலமைச்சரின் கையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
– சபையில் இருந்து எமது விசேட நிருபர் –