வடமாகாண வலசைப் பறவைகள் தினம் பெப்ரவரி இரண்டாவது வாரத்தில் : அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அறிவிப்பு

வடமாகாண வலசைப் பறவைகள் தினம் அடுத்த ஆண்டில் இருந்து பெப்ரவரி மாதத்தின் இடண்டாவது வார இறுதி நாட்களில் கொண்டாடப்படவுள்ளதாக வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அறிவித்துள்ளார்.

வடக்கு சுற்றாடல் அமைச்சால் உலக வலசைப் பறவைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான கருத்தமர்வும் வெளிக்களப் பயிற்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை (14.05.2017) யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

உலக வலசைப் பறவைகள் தினம் ஆண்டுதோறும் மேமாதம் இரண்டாவது வாரத்தின் இறுதி நாட்களில் கொண்டாடப்பட்டுவருகிறது. கடல்நீரேரிகளைக் கொண்டிருப்பதால்யாழ்குடாநாடு அதிக அளவுக்குத் தென்இலங்கையில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பறவைகள் வந்து தங்கிச் செல்லும் இடமாக உள்ளது. இதைக் கருத்திற் கொண்டு வலசைப் பறவைகள் பற்றியும் எமது இயற்கைச் சூழல் பற்றியும் மாணவர்களுக்கு அறிவூட்டும் நோக்கில் நாங்களும் உலக வலசைப் பறவைகள் தினத்தை 2015ஆம் ஆண்டில் இருந்து சிறப்பாகக் கடைப்பிடித்து வருகிறோம்.

வடக்குக்கு ஆண்டுதோறும் ஓகஸ்ட், செப்ரம்பர் மாதங்களில் வருகின்ற வலசைப் பறவைகளில் பெரும்பாலானவை ஏப்ரல், மே மாதங்களில் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்று விடுகின்றன. ஏப்ரல், மே மாதங்களில் எங்களது கடல்நீரேரிகளும் வற்ற ஆரம்பித்து விடுகின்றன. இதனால் மாணவர்கள் கூடுதலான பறவைகளை அவதானிப்பதற்கு வசதியாக வடமாகாணத்துக்குப் பொருத்தமான காலப்பகுதியில் வலசைப் பறவைகள் தினத்தை ஏற்பாடு செய்யுமாறு பறவை ஆய்வாளர்கள் எங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்கள். பல நாடுகள் தங்களது பருவ நிலைக்கேற்பவே வலசைப் பறவைகள் தினத்தைக் கொண்டாடி வருகின்றன.

இவற்றைக் கருத்திற்கொண்டே,வடக்கு மாகாண வலசைப் பறவைகள் தினத்தை அடுத்த ஆண்டில் இருந்து பெப்ரவரி மாதத்தில் இரண்டாவது வார இறுதி நாட்களில் கொண்டாடுவதுஎன விவசாய அமைச்சின் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு,அமைச்சரவையிலும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையிலும் இது அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, மாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன்,அ.பரஞ்சோதி, பல்கலைக்கழக விஞ்ஞானபீட பதில்பீடாதிபதி பேராசிரியர் சிவசாந்தினி குகநாதன், பிரதிக்கல்விப் பணிப்பாளர் அ.அகிலதாஸ், ஹற்றன் நஷனல் வங்கி பிராந்திய முகாமையாளர் சி.சுந்தரேஸ்வரன், பறவைகள் ஆய்வாளர் க.அசோகன், விவசாய அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Related Posts