வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வர்ண இரவு 2012 ஆம் ஆண்டு நிகழ்வுகள் நேற்று மாலை யாழ்ப்பாணம் தேசிய கல்வியல் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.வடமாகாணத்தின் சார்பில் பங்குபற்றி தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் வெற்றியீட்டிய வீர வீராங்கனைகளுக்கான பதக்கங்களும், வெற்றிக்கேடங்களும் இந்நிகழ்வில் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மூன்றாவது வருடமாக நடைபெறும் இவ் வர்ண இரவுகள் நிகழ்வில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 213 வீர வீராங்கனைகளும் வவுனியாவைச் சேர்ந்த 42 வீர வீராங்கனைகளும், மன்னாரைச் சேர்ந்த 35 வீர, வீராங்கனைகளும் கிளிநொச்சியைச் சேர்ந்த 10 வீர வீராங்கனைகளும் அடங்கலாக மொத்தம் 300 இற்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் கௌரவிக்கப்பட்டனர்.
அத்தடன் அவர்களுக்கு பயிற்சிகளை வழங்கிய பயிற்றுநர்களும், அதிபர்களும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
வடமாகாணம் சார்பில் அதிக தங்க பதக்கங்களாக, 9 தங்க பதக்கங்களை வென்றெடுத்த அருணோதயக் கல்லூரிக்கு 0.5 மில்லியன் பெறுமதியான காசேலையும் இந்நிகழ்வில் வழங்கப்பட்டது.
மாற்றுவலுவுள்ளோருக்காக, மலேசியாவில் நடைபெற்ற போட்டியில் வெற்றியீட்டிய கிளிநொச்சியினைச் சேர்ந்த 3 வீராங்கனைகளும்
விசேடமாகக் கௌரவிக்கப்பட்டனர்.
வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற மேற்படி விழாவில், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறிய கைத்தொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா உட்பட பலர் கலந்துகொண்டனர்.