வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு

வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேசப்பற்றுள்ள இளைஞர் அமைப்பினால் இன்று திங்கட்கிழமை விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘வடக்கு மாகாணத்திலிருந்து 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் இரண்டரை மணித்தியால காலக்கெடுவுக்குள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவமானது அம்மக்களை தொடர்ச்சியாக 25 வருடங்கள் மிகுந்த துயரத்துடனான அவல வாழ்க்கைக்கு இட்டுச் சென்றுள்ளது.

இந்நிலையில் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சகல விதமான அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து மீள்குடியமர்த்துவதில் கவனஞ் செலுத்தப்பட வேண்டும்.

2009ஆம் ஆண்டு இலங்கையில் கொடூர யுத்தம் நிறைவடைந்து 6 வருடங்கள் கடந்தாயிற்று. ஆயினும், இதுவரை முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கரிசனை காட்டப்படவில்லை.

இந்நிலையில் அகதி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கான அழைப்பை தேசப்பற்றுள்ள இளைஞர் அமைப்பு விடுக்கின்றது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23.10.2015) பெரிய தொழுகையைத் தொடர்ந்து, அமைதியான முறையில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நாடு முழுவதிலும் நடத்துவதற்கு வேண்டுகின்றோம்.

யுத்தம் நிறைவடைந்து வடக்கில் தமிழ் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டனர்.

சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்திய அரசாங்கம், முஸ்லிம்கள் மீது எதுவித கரிசனையையும் காட்டவில்லை.

அரசாங்கத்திலிருந்த அமைச்சர்களும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் இதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்பதை கவலையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இந்நிலையில், நல்லாட்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் தற்போதைய புதிய அரசாங்கத்திலும் முஸ்லிம் தலைவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

எனினும், இவர்கள் இதுவரை முஸ்லிம்களின் மீள்குடியேற்றதை சாத்தியப்படுத்துவதற்கு எவ்விமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவதாக தெரியவில்லை என்பது வேதனையளிக்கிறது. எனவே, மக்கள் ஒன்றிணைந்து – ஜனநாயக முறையில் அரசாங்கத்துக்கு அழுத்தத்தைக் கொடுத்து, வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை சாத்தியப்படுத்துவதற்காக குரல் கொடுப்போம். இது காலத்தின் தேவையாகும்.

இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தமது பூர்வீக வாழ்விடங்களை இழந்து அவல வாழ்வை அனுபவிக்கும் வடக்கு மாகாணத்தை சேர்ந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்துவதை மாத்திரமே நோக்காகக் கொண்டுள்ளது.

மாறாக, வேறு எந்த தரப்பினரையும் புண்படுத்துவதற்காகவல்ல என்பதையும் ஐக்கியப்பட்ட சமூக சகவாழ்விற்கும் இன சௌஜன்யத்திற்கும் நமது போராட்டத்தினால் ஊறு விளைந்து விடக் கூடாது என்பதிலும் நாம் மிகக் கவனமாக இருக்கவேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts