வடமாகாண முன்னாள் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் கீழ் இருந்த விடயதானங்களில், வடமாகாண சபையின் கீழ் மாற்றம் செய்வதற்கு வடமாகாண உறுப்பினர்களின் சம்மதம் பெறப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையின் கட்டடத்தில் திங்கட்கிழமை (19) நடைபெற்றது.
வடமாகாண ஆளுநருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு 89 ஆயிரத்து 169 மில்லியன் ரூபாய் ஆக இருந்த செலவினம் 2015ஆம் ஆண்டில் 132 ஆயிரத்து 917 மில்லியன் ரூபாய் என அதிகரித்தமைக்கான புதிய செயற்றிட்டங்களை வடமாகாண சபையின் கீழ் கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
இது தொடர்பில் சிவஞானம் மேலும் தெரிவித்ததாவது,
‘இவற்றை மாற்றுவது தொடர்பில் ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், உதவிச் செயலாளர் ஜே.எஸ்.செல்வநாயகம், நிதி உதவியாளர் கு.சஜித் சாந்தகுமார் ஆகியோருடன் கடந்த 10ஆம் திகதி கலந்துரையாடப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது.
பிராந்திய ஆணையாளர் என்ற பதவி வகித்து தற்பொழுது உதவிச் செயலாளர்களாகப் பணியாற்றுவோர் ஆளுநர் செயலகத்திலிருந்து மாகாணப் பொது நிர்வாகப் பகுதிக்கு மாற்றம் செய்யப்படுவார்கள். இவர்களுக்கான ஆளணி, ஆளுநர் செயலகத்துடன் இணைந்துள்ளதால் இந்த மாற்றத்துக்கான அங்கிகாரத்தை புதிய ஆளுநர் ஒப்புதலுடன் முகாமைத்துவ மாகாணப் பொது நிர்வாகப் பகுதியிடம் இருந்து பெற்றுக்கொள்ளுதல்.
மாகாணப் பொது நிர்வாகப் பகுதி இவர்களது பணித்தேவை மற்றும் கடமைப் பொறுப்புக்கள் பற்றி ஆராய்ந்து முடிவெடுக்கும். ஆளுநர் செயலகத்தால் கையாளப்படும் மும்மொழிப்பயிற்சி அலகு, செஸ் பயிற்சி, விவாதப் பயிற்சி, கலாச்சார நிகழ்வு, யோகப் பயிற்சி ஆகிய செயற்றிட்டங்களை வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்படவுள்ளது.
ஆளுநர் செயலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள வடமாகாண இணையத்தளம் முன்பிருந்தது போல திட்டமிடல் பகுதிக்கு மாற்றப்படுதல்.
இந்த மாற்றங்களுக்கான செலவீனத்தை பிரதம செயலாளர் மற்றும் பிரதிப் பிரதம செயலாளர் நிதி ஆகியோர் கணிப்பீடு செய்து உரிய செலவீனத் தலைப்பில் மாற்றங்கள் செய்வார்கள்.
இந்த மாற்றங்கள் தொடர்பான விடயங்கள் வடமாகாண ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.