முஸ்லீம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் வெளியிட்ட கருத்து உண்மைக்கு புறம்பானது -அஸ்மின்

“வடமாகாண முதலமைச்சர் முஸ்லீம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் வெளியிட்ட கருத்து உண்மைக்கு புறம்பானது” என வடமாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மின் தெரிவித்துள்ளார்

“வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் முதல்வர் முன்வைக்கும் கருத்துக்கள் தரவுகள் அனைத்துமே மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படல் அவசியமாகும்.

வடக்கு மாகாணசபையில் முழுநாள் விவாதமொன்று நடாத்தப்பட்டு வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலான நிலைப்பாடுகளும் கருத்துக்களும் தெளிவுபடுத்தப்படல் அவசியமாகும் என்று நான் வலியுறுத்துகின்றேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் முஸ்லிம்களுக்கே முன்னுரிமை “வடமாகாண சபையின் தற்போது வரையான ஆட்சிக்காலத்தில் 24 ஆயிரத்து 41 முஸ்லிம்கள் வடக்கில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்” என தெரிவித்து, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஊடகங்களுக்கு செய்திக்குறிப்பொன்றை அனுப்பியிருந்தார்.

அதில், “3 ஆயிரத்து 145 முஸ்லிம்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில், வடமாகாணசபை பாராபட்சம் காட்டியது என தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது” எனவும் சி.வி குறிப்பிட்டிருந்தார். சி.வியின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதத்தில், வடமாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மின், அதனை மறுத்து அறிக்கை வௌியிட்டுள்ளார்.

Related Posts