அரசாங்கம் பல நன்மைகளை செய்து வந்தாலும், இராணுவம் இருப்பது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிரைஸ்ஸி ஜோன் ஹட்சசனுக்கு (Bryce Hatcesson) இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
சுமார் 1 மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாணத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் உதவிகளையும், எதிர்காலத்தில் வழங்க வேண்டிய உதவித்திட்டங்கள் பற்றியும் ஆராய்வதற்கு வருகை தந்துள்ளார்.
அப்போது, மத்திய அரசாங்கமும் அவுஸ்திரேலிய அரசாங்கமும் இணைந்து, செய்யும் வேலைத்திட்டத்தில் மாகாண அரசின் பங்கு சொல்லக்கூடிய அளவிற்கு இல்லை. எமது மக்களுக்காக செய்யும் போது எமதுமக்கள் பிரதிநிதிகளுடன் கலந்து பேசி அவர்களின் கருத்தினை அறிந்து செய்வதே முறையானது என அவரிடம் கூறினேன்.
அரசாங்கம் என்ற வகையில், அரசுடன் இணைந்து செய்வதே சிறந்தது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதை நான் எதிர்க்கவில்லை. மக்களின் பிரதிநிதிகளை புறக்கணித்து மத்திய அரசாங்கத்தின் சொற்படி நடப்பது முறையற்றது.
எம்முடன் கலந்தாலோசித்து செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினேன். அந்த கருத்தினை கருத்தில் எடுப்பதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இங்குள்ள நிலவரம் பற்றி பேசியபோது,
இங்கு சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், இராணுவம் இருப்பது எமக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. அரசாங்கம் எமக்கு நன்மை செய்வதாக உறுதியளித்து நன்மை செய்து வந்தாலும், தொடர்ந்து இராணுவம் இருப்பதை எமது மக்களினால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது.
யுத்தம் முடிந்து 6 வருடங்கள் ஆகிவிட்டாலும், படிப்படியாக இராணுவ பிரசன்னத்தினை குறைப்பதே முறையானது என்றும் குறிப்பிட்டேன்.
மத்திய அரசாங்கம் மாகாண அரசாங்கத்தினைப் புறக்கணித்து தனது செயற்பாடுகளை முன்னெடுத்துக்கொண்டு செல்கின்றமை எமக்கு வருத்தத்தினை தருகின்றது.
மாகாண சபைக்கான அதிகாரங்களைக் கொடுத்து, அதிகார பகிர்வில் ஈடுபடுவதாக குறிப்பிட்டதன் பின்னர் அதற்கு மாறாக மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை பிரயோகிப்பது அதிகார பகிர்வுக்கு எதிரான ஒரு தன்மையினை வெளிப்படுத்தும் என்பதனையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
எமக்கு இருக்கும் பிரச்சினைகளையும், எங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதாகவும், எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை வடமாகாண சபையுடன் இணைந்து செய்ய விரும்புவதாகவும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார் என வடமாகாண முதலமைச்சர் மேலும் கூறினார்.