வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆளுநரிடம் விடுத்த எழுத்துமூலமான குற்றசாட்டு தொடர்பாக இந்த விசாரணைகள் நடைபெறவுள்ளன. சுகார அமைச்சின் செயலாளர் திருவாகரன், வடமாகாண கணக்காய்வுத் திணைக்கள பணிப்பாளர் எஸ்.சுரேந்தினி, மாகாண சுகாதார திணைக்கள கணக்காளர் கஜேந்திரன் ஆகியோர் இந்த விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
எதிர்வரும் இரு வாரங்களுக்குள் விசாரணைகளின் அறிக்கையினை சமர்பிக்குமாறு ஆளுநர் றெஜினோல்ட் குரே விசாரணை அதிகாரிகளை பணித்துள்ளார்.
முன்னாள் வட மாகாண ஆளுநர் சந்திரசிறியால் பல்வேறு அமைச்சின் திணைக்களங்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ஒரு தொகுதி நிதி வடமாகாண ஆளுநர் சுயேட்சை நிதியத்தின் வங்கி கணக்கில் நிலையான வைப்பிலப்பட்டு அதன் வட்டிப் பணத்திலிருந்து சிறுநீரகம் மற்றும் இதய சத்திரசிகிச்சை போன்ற நோய்களினால் வடமாகாணத்தில் பாதிகப்பட்டவர்களின் வைத்திய செலவிற்கு ஆளுநர் சுயேட்சை நிதியம் ஊடாக வழங்கப்பட்டு வந்தது.
ஆயினும் வடமாகாணசபை உருவாக்கப்பட்டதன் பின்னர் அதன் அனைத்து நிதிகளும் அந்தந்த திணைக்களங்களுக்கு மீள அழிக்கப்பட்டது. மாகாண கணக்காய்வு கூட்டத்தில் இந்த நிதியினை பொருத்தமான திட்டங்களுக்கு மாகாணசபையின் அனுமதியுடன் செயற்படுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த தீர்மானத்திற்கு மாறாக மகளீர் விவகார அமைச்சிற்கு வழங்கப்பட்ட நிதியினை முறைகேடாக பயன்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆளுநர் றெஜினோல்ட் குரே ஆரம்பித்துள்ளார்.