இலங்கையில் ஜனாதிபதியும், அமைச்சர்களும், ஆளுங்கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து மேற்கொண்டு வரும் பிடிவாதமான முயற்சிகளின் விளைவாக இலங்கை வடக்கு மாகாணத்தில் குறிப்பிட்டபடி தேர்தல் நடைபெறுமா என்பது கேள்விக் குறியாகி இருக்கிறது. என்று திமுக தலைர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவா் கருணாநிதி இலங்கை விவகாரம் தொடர்பாக வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கை
கேள்வி:- இலங்கை – வடக்கு மாகாணசபைக்கான தேர்தல், வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தத்திற்கு ஆபத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் வலுப்பெற்று வருகின்றனவே?
பதில்:- தமிழீழப் பகுதிகளுக்கு அரசியல் அதிகாரம் வழங்கிடும் பிரச்சினை விவாதிக்கப்பட்டு, 1987 ஜூலை மாதம் உருவாக்கப்பட்டதே ராஜீவ் காந்தி – ஜெயவர்தனே ஒப்பந்தம். இந்த ஒப்பந்தம் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மிக முக்கியமானதொரு மைல் கல் என வரவேற்பைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து தமிழர்களின் மாகாணத்திற்கு வரையறுக்கப்பட்ட அதிகாரம் மட்டுமே வழங்கிடக் கூடிய வகையில், இலங்கை அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ் இனம் குறித்து சிங்கள அரசுடன் ஏற்படுத்தப்பட்ட எந்த ஒப்பந்தமும் நிறைவேற்றப்பட்டது இல்லை என்ற எதிர்மறைப் பின்னணியைக் கொண்டது இலங்கை அரசியல் வரலாறு.
அந்த வரலாற்றின் தொடர்ச்சியாகவே, ராஜீவ்காந்தி- ஜெயவர்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான உருப்படியான முயற்சிகள் எதையும் ஜெயவர்தனாவும் மேற்கொள்ளவில்லை. அவருக்குப் பிறகு இலங்கை அதிபர்களாகப் பொறுப் பேற்றுக் கொண்டவர்களும் மேற்கொள்ளவில்லை.
இலங்கை அதிபர் ராஜபக்ச, 13-வது திருத்தத்திற்கு அதிகமாகவும் அதிகாரம் வழங்கப் போவதாக உறுதிமொழி அளித்து, இந்தியாவையும் உலக நாடுகளையும் நம்ப வைத்தார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எம். கிருஷ்ணா 17-1-2012 அன்று அதிபர் ராஜபக்சவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதற்குப் பிறகு, ´´அதிபர் ராஜபக் அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தத்திற்கு அதிகமாகவும் அதிகாரம் வழங்கும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்´´ என்று அறிக்கை வெளியிட்டார்.
ஆனால் பாராளுமன்றத் தேர்வுக்குழு இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆலோசனையை வழங்கும் என்று 2012 பிப்ரவரி மாதம் அறிவித்து, தமிழர்களை அதிர்ச்சி அடையச் செய்தார் அதிபர் ராஜபக்சே.
சிங்களப் பேரினவாதிகள் 13-வது சட்டத் திருத்தத்தை எப்படியாவது ரத்து செய்திட வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க என்பவர், இலங்கை வடக்கு மாகாணத்திற்கு தேர்தல் நடத்துவது என்பது போரில் இறந்த இலங்கை இராணுவ வீரர்களை அவமதிக்கும் நிகழ்வாகும் என்று பேசியிருக்கிறார்.
அவர் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் கருத்தரங்கு ஒன்றில் பேசும்போது, 13-வது திருத்தத்தை ரத்து செய்வதற்கும் மாகாண கவுன்சில் திட்டத்தை நீக்கம் செய்வதற்கும் தனிநபர் தீர்மானம் ஒன்றை இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்போவதாக அறிவித்திருக்கிறார்.
இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தி, நிலம் தொடர்பாகவும், காவல்துறை தொடர்பாகவும் அதிகாரம் வழங்குவது என்பது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தி, தேச ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் என்றும் சொல்லி இருக்கிறார்.
இலங்கையில் ஆளும் கூட்டணியில் உள்ள ஜாதிக ஹெல உறுமய, ஜனதா நிதாகாஸ் பெரமுன, தேசிய விடுதலை முன்னணி போன்ற கட்சிகள் தொடர்ந்து 13-ஆவது திருத்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இவற்றிற்கிடையே இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பீரீசுடன் 17-5-2013 அன்று பேசி, 13-வது திருத்தத்தை பலவீனப்படுத்தும் எவ்வித முயற்சியையும் இலங்கை மேற்கொள்ளக் கூடாது என்று தெரிவித்திருக்கிறார்.
இலங்கையில் ஜனாதிபதியும், அமைச்சர்களும், ஆளுங்கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து மேற்கொண்டு வரும் பிடிவாதமான முயற்சிகளின் விளைவாக இலங்கை வடக்கு மாகாணத்தில் குறிப்பிட்டபடி தேர்தல் நடைபெறுமா என்பது கேள்விக் குறியாகி இருக்கிறது.
கேள்வி:- தமிழக மீனவர்களுக்கு புதிய சிக்கல்கள் உருவாகி வருவதாகச் சொல்லப்படுகிறதே?
பதில்:- மீன்பிடித் தடைக்காலம் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், தமிழக மீனவர்கள் குறிப்பாக இராமேஸ்வரம் மீனவர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அவர்களது கவலைக்குக் காரணம், மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்திருக்கும் புதிய நடைமுறை ஆகும். இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் அவர்களின் மீன் பிடிப்பு உரிமைகளும் ரத்து செய்யப்படும் என்ற மத்திய அரசின் உத்தேச நடைமுறை மீனவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது.
இலங்கைக் கடல் தொழில் மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்தின என்பவர் ´´சீன மீன்பிடிக் கப்பல்கள் இலங்கைக் கொடியுடன் சர்வதேசக் கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடிக்க உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
ஆழ்கடல் மீன் பிடிப்பில் இலங்கைக்கு உள்ள உரிமைகளைப் பயன்படுத்த சீனாவை அனுமதித்திட இலங்கை அரசு முடிவெடுத் துள்ளதாகவும் அந்த அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இலங்கை அமைச்சர் குறிப்பிடும் பகுதிகளில் இந்திய மீனவர்களை விரட்டிவிட்டு, சீனப் படகுகளைக் கொண்டுவர உத்தேசித்திருக்கும் இலங்கை அரசின் நடவடிக்கை தமிழக மீனவர்களை மேலும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது.
ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகளோடு தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக நாள்தோறும் போராடிக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை, இந்த இரண்டு சிக்கல்களில் இருந்தும் தமிழக அரசும் மத்திய அரசும் காப்பாற்ற வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.