வடமாகாண சுகாதார அமைச்சருக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!!

தனக்கு வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பில், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக, வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில், இன்று (10) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது,

“வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு, கடந்த 4 வருடங்களாக எனக்கும் வழங்கப்பட்டிருந்தது.

“மன்னார் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 2 பொலிஸார், கடந்த 4 வருடங்களாக எனது மெய்ப்பாதுகாவலர்களாகக் கடமையாற்றி வந்தனர்.

“இந்த நிலையில், தற்போது வடமாகாண சுகாதார அமைச்சராக நான் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், எனக்கு தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் கடமையை, மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிலையப் பொறுப்பதிகாரி மட்டுப்படுத்தியுள்ளார்.

“குறித்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் மன்னார் பொலிஸ் நிலைய பிரிவைத் தவிர, வேறு எங்கும் செல்ல வேண்டாம் என, மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உத்தரவிட்டுள்ளார். இதனால் அவர்கள் மீள பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

“வடமாகாண சுகாதார அமைச்சர் என்ற வகையில், நான் வடக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல வேண்டியுள்ளது.

அங்குச் செல்லும் போது, எனது மெய்ப்பாதுகாவலர்கள் என்னுடன் கூட வர வேண்டிய நிலை உள்ளது. ஏனைய மாகாண சபை உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்களுக்கு பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள பொலிஸார் கூடவே செல்லுகின்றனர்.

“கடந்த காலங்களில், எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை. தற்போது மன்னார் பொலிஸ் நிலையத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிலையப் பொறுப்பதிகாரியே, குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

“மன்னாரைச் சேர்ந்த மேலும் ஒரு மாகாண சபை உறுப்பினருக்கு, மன்னார் பொலிஸ் நிலையத்தினுடாக வழங்கப்பட்டிருந்த தனிப்பாட்ட பொலிஸ் பாதுகாப்பும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிகின்றேன்.

“குறித்த மாகாண சபை உறுப்பினரின் மெய்ப்பாதுகாவலர்கள் இருவரும், மன்னார் பொலிஸ் நிலைய பகுதியை தவிர வேறு எங்கும் செல்ல அனுமதி இல்லை.

“இவ்விடயம் தொடர்பில், வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் கவனத்துக்குக் கொண்டுச் சென்றுள்ளதோடு,பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கும் கொண்டுச் செல்லவுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

Related Posts