வடமாகாண சபையின் கட்டடத் தொகுதியை வடமாகாணத்தின் மத்தியாகக் கொள்ளப்படும் மாங்குளத்தில் அமைப்பதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மாங்குளம் பகுதியில் வடமாகாண சபை கட்டடத் தொகுதியை அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் காணியை, வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் ஆகியோர் திங்கட்கிழமை (14) பார்வையிட்டுள்ளனர்.
மாங்குளம் சந்தியிலிருந்து 500 மீற்றர் வடக்கில் ஏ – 9 வீதியில் 12 ஏக்கர் காணி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபை, தற்போது கைதடியில் அமைந்துள்ளது. வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் மத்தியில் வடமாகாண சபையை அமைப்பதற்கு பல்வேறுபட்ட கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.
கைதடியில் வடமாகாண சபை அமைந்திருப்பதால், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய சிரமம் ஏற்பட்டது. மாங்குளத்தில் கட்டடத் தொகுதியை அமைக்கும் பட்சத்தில் பல்வேறு சிரமங்களை தவிர்க்க முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண ஆளுநர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.