தகவல் அறியும் சட்டமூலம் பிரிவு பிரிவாக விவாதித்து பரிந்துரைகள் வழங்கப்பட வேண்டும் எனக்கூறப்பட்டபோதும், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் உறுப்பினர்கள் சிலரின் பரிந்துரைகளுடன் தகவல் அறியும் சட்டமூலத்தை வடமாகாண சபை ஏற்றுக்கொண்டது.
தேநீர் இடைவேளை வரை, தகவல் அறியும் சட்டமூலத்தைப் பற்றி தனித்தனியாக விவாதித்து முடிவெடுக்க வேண்டும். இதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் அமர்வுகள் தேவைப்படும் எனக்கூறிய உறுப்பினர்கள், தேநீர் இடைவேளை முடிந்த பின்னர் சட்டமூலத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தனர்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, வடமாகாண சபையில் வியாழக்கிழமை (10) நடைபெற்ற போது, தகவல் அறியும் சட்டமூலத்துக்கு வடமாகாண சபை பரிந்துரை வழங்கும் நடவடிக்கை இடம்பெற்றது.
இதன்போது, இந்தச் சட்டமூலத்தை பிரிவு பிரிவாக விவாதித்து, பரிந்துரைகள் வழங்க வேண்டும், கடந்த காலங்களில் நாங்கள் வஞ்சிக்கப்பட்டது போன்று இனிவருங்காலங்களிலும் வஞ்சிக்கப்படக்கூடாது என உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும், தகவல் அறியும் சட்டமூலத்தில் தேசிய பாதுகாப்பு எனப்படும் விடயம் வரையறை செய்யப்பட வேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரனும் கருத்துக்களை முன்வைத்தனர்.
மேலும் சில உறுப்பினர்கள், நீண்ட கால அமர்வில் பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும் எனக் கூறினர்.
இதன்பின்னர் தேநீர் இடைவேளை விடப்பட்டது. தேநீர் இடைவேளை முடிவடைந்து, சபை கூடியதும், ‘வடமாகாண முதலமைச்சரால் செய்யப்பட்ட திருத்தங்கள் மற்றும் உறுப்பினர்கள் சிலரின் தீர்மானங்களுடன் இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அனுப்பவுள்ளோம். இதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்கின்றதா?’ என அவைத்தலைவர் சி.வி.கே உறுப்பினர்களைப் பார்த்துக் கேட்டார்.
இதையடுத்து, எவரும் ஆட்சேபனை தெரிவிக்காத நிலையில், சட்டமூலத்தை ஏற்றுக்கொள்வதாக அவைத்தலைவர் அறிவித்தார்.