தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
வடக்கு மாகாணசபையின் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்களின் சத்தியப்பிரமான நிகழ்வும், பதவியேற்பும் இன்று காலை 9.00 மணிக்கு வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது .மாவீரர்களிற்கான அஞ்சலியுடன் நிகழ்வு ஆரம்பமாகியிருந்ததுடன்
கூட்டமைப்பின் தலைவர், மற்றும் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள், வடக்கு மாகாணசபைக் கூட்டமைப்பு உறுப்பினர்களில் பெரும்பான்மையானோரும் ஆதரவாளர்களும் மற்றும் அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகளும் இப்பதவியேற்பில் கலந்துகொண்டனர்.ஆயர்கள் நல்லைக்குருமகா சந்நிதானம், மாவை ஆதீனக்குருக்கள், முஸ்லிம் மௌலவிகள் கலந்து ஆசிவழங்கினர்.
இந் நிகழ்வில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் 8 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சி தலைவர்களான சுரேஸ்பிறேமச்சந்திரன் மற்றும் சித்தார்த்தன் வீ.ஆனந்த சங்கரி ஆகியோர் நிகழ்வை புறக்கணித்திருந்தனர்.டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் சமூகமளித்திருந்ததுடன் யாழ்.மாவட்ட அமைப்பாளர் விந்தனும் பிரசன்னமாகி சத்தியப்பிரமாணம் செய்து கொண்டிருந்தார்.ஈபிஆர்எல்எவ் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ள ஜங்கரநேசன் சமூகமளித்திருந்தார்
கோலாக கொண்டாட்டங்கள் ஏதுமின்றி நிகழ்வு இடம்பெற்றிருந்தது.வடமாகாணசபையினது அமைச்சு செயலர்கள் மற்றும் அதிகாரிகள் பெருமளவினில் நிறைந்திருந்தனர்.
நாடாளுமன்மற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.எல்.ஆர்.எப்பில் அங்கம் வகிக்கும் 5 உறுப்பினர்களும் சித்தார்த்தன் தலைமையிலான புளொட்டில் அங்கம் வகிக்கும் 2 உறுப்பினர்களும் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோவில் அங்கம் வகிக்கும் ஒருவரும் இப்பதவி பிரமாண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை
வடமாகாண சபையின் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர் ஆறுமுகம் கந்தையா சர்வேஸ்வரன், சிவப்பிரகாசம் சிவமோகன், எம்.தியாகராஜா, மயில்வாகனம் இந்திரராஜா, ஆறுமுகம் சின்னத்துரை துரைராஜா ரவிகரன், புளொட் அமைப்பின் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், கந்தர் தமோதரம்பிள்ளை லிங்கநாதன், ரெலோ அமைப்பின் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் ஆகிய உறுப்பினர்கள் பதவியேற்பில் கலந்துகொள்ளவில்லை.
இன்னும் ஒரு உறுப்பினரான மருத்துவர் குணசீலன் வரும் வழியில் மனைவிக்கு ஏற்பட்ட விபத்துகாரணமாக பதவியேற்பில் கலந்துகொள்ள முடியவில்லை என்று முன்னர் கூறப்பட்டாலும் அவரும் புறக்கணிப்பில் ஈடுபட்டதாகவே தெரிவித்திருக்கின்றார்.
இதேவேளை 4 அமைச்சர்களினதும் நியமனங்கள் ஆளுனரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தி கிடைத்ததை அடுத்து அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
காலை 8.30 மணிக்கு தந்தை செல்வா நினைவு தூபிக்கு வணக்கம் செலுத்திய பின் வீர சிங்கம் மண்டபத்தில் இப் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் சம்பந்தன் மேற்படி குழப்பம் குறித்து கடுமையான தொனியில் பேசினார். அமைச்சர்களைத்தெரிவு செய்யும் அதிகாரம் முதலமைச்சருக்கே உரியது என வலியுறுத்தியதுடன் சிலரின் தான்தோன்றித்தனமான முடிவுகளால் ஒட்டுமொத்த கூட்டமைப்புக்கும் பாதிப்பு என கண்டித்தார்.மக்கள் அமச்சுக்களை நம்பி கூட்டமைப்பினை தெரிவுசெய்யில்லை எனவும் குறிப்பிட்டார்.மக்களின் ஆணையினை சீர்குலைப்பதற்கு தான் ஒருவரையும் அனுமதிக்கப்போவதில்லை என கடும் தொனியில் கர்ஜித்ததார். நாங்கள் சகோதரர்கள் நண்பர்கள் எனவும் நமக்குள் விரோதங்கள் அவசியமில்லை மனம்மாறி வருமாறும் அழைப்பு விடுத்தார்.
அவர் தனது உரையில் தீர்வு குறித்த பேச்சுக்கு தயார் என்றும் ஆனால் பேரினவாதிகளின் சங்கமமாயுள்ள தெரிவுக்குழுவுக்கு வரத்தயாரில்லை என சூசகமாக அரசுக்கு எச்சரிக்ககை விடுத்தார்.அத்துடன் அரசு இன்னும் விசுவாசமாக நடந்துகொள்ளவில்லை என்றும் இதுவரைகாலமுத் தீர்வுக்கு போகாமைக்கு போர் தான் காரணம் என்று கூறிய அரசு இனியும் அதை முன்வைக்காவிட்டால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் எனவும் எச்சரித்தார்.
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மிகவும் பொறுப்பான உரையொன்றினை ஆற்றி அவையோரின பாராட்டுதல்களை பெற்றார்.வழைமையினை விட இன்று கோபத்துடன் உரையாற்றியிருந்தார்.அமைச்சர் பதவி குறித்து எதிர்ப்பு காட்டி பதவி ஏற்க வருகை தராத உறுப்பினர்களையும் தலைமைகளையும் கடிந்து கொண்டார்.உறவுகளுக்கு அமைச்சுக்களையும் பதவிகளையும் கொடுப்பதற்காக மக்கள் தங்களை தெரிவுசெய்யவில்லையெனவும் குறிபிட்டார்.தன்னிடம் இதுபற்றி விளக்கம் கேட்டால் அதுபற்றி தெளிவு படுத்த தயார் எனவும் குறிப்பிட்டார்.
பொதுவாழ்வில் ஈடுபடுபவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய 7 விடயங்ளை சுட்டிக்காட்டினார்.பணம்சம்பாதிக்கும் நோக்கில் தமிழ்த்தேசிய அரசியலுக்கு யாரும் வரவேண்டாம் எனவும் கூறினார்.
அமைச்சுப்பதவிகள் கேட்காதவர்களுக்குதான் அமைச்சுப்பதவி தகமையடிப்படையில் வழங்கப்பட்டதாக சுமந்திரன் தனது உரையில் குறிப்பிட்டார்.
குளத்தில் மீன்குஞ்சு விடுவதற்கான அமைச்சுக்களை பெறுவதற்கும் அதற்காக மல்லுக்கு நிற்பதற்கும் மக்கள் 30 பேரை தெரிவுசெய்யவில்லை, இறுதி இலக்கினை அடைவதற்கான ஒருபுள்ளி தான் இந்த மாகாணசபை. இந்தியாவினுடைய முன்னேற்றகரமான சூழலும், அமெரிக்காவின் ஐ.நா அறிக்கையின் வெளிப்பாட்டினாலும் இலங்கை அரசாங்கம் இந்த மாகாண சபைத் தேர்தலை நடத்தியிருக்கின்றது. ஆனால் இவற்றுக்குப் பின்னால் சமுதாய போராளிகளுடைய கனவு இருக்கின்றது என்பதை யாவரும் அறிய வேண்டும்.
ஒட்டுமொத்தமாக தமிழீழம் என்ற சொல்லை முதன் முதலில் உச்சரித்த எங்கள் மண்ணின் தந்தை செல்வாவின் சமாதி முன்னே நாங்கள் இன்று பூ போடுவது போன்று, உயிரினும் மேலான அன்புச் செல்வங்களின் மாவீரர் கல்லறைகளில் பூப்போடும் காலம் அண்மித்து விட்டது.
எங்களது வடக்கும் கிழக்கும் இணைந்த தாயக மண்ணில் எங்களுடைய சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு, எங்களுடைய தாயகம், எங்களுடைய தேசியம் ஏற்றுக் கொள்ளப்பட்டு
எங்களுக்கான ஒரு தீர்வு வழங்கப்படும் வரை நாங்கள் போராடுவோம் எனத் தெரிவித்துள்ளார். என்று சிறீதரன் எம்பி குறிப்பிட்டார்.
இதேவேளை பழைய தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள் சம்பந்தனுக்கு இராஜகிரீடம் சூட்டியும் பொன்னாடை போர்த்தியும் விக்கினேஸ்வரனுக்கு வேல் அன்பளிப்பு செய்து இராஜகிரீடம் சூட்டியும் பொன்னாடைபோரத்தியும் மகிழ்ந்தனர். உடனே அவர்கள் கழற்ற முயற்சி செய்த போதும் ஊடகவியலாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தரிசனம் கொடுத்தனர்