Ad Widget

வடமாகாண சபை கட்டிடத்துக்காக நிதி கோரல்

வடமாகாண சபை கட்டிட தொகுதியில் மேலதிக கட்டிட வேலைகளுக்காக சி.சி.பி திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட 90 மில்லியன் ரூபாய் நிதியில், முதற்கட்டமாக 40.5 மில்லியன் ரூபாவை வழங்குமாறு மத்திய அரசிடம் கோரியுள்ளதாக வடமாகாண அவைத்தலைவர் தெரிவித்தார்.

CVK-Sivaganam

வடமாகாண சபையின் மாதாந்த கூட்டத்தொடர் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிட தொகுதியில் புதன்கிழமை (10) இடம்பெற்று வருகின்றது. இதன்போதே அவைத்தலைவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

சி.சி.பி திட்டத்தின் மூலம் வடமாகாண கட்டிட தொகுதிக்காக ஒதுக்கப்பட்ட 90 மில்லியன் ரூபாய் நிதியில் 49.5 மில்லியன் ரூபாய், நிதி வடமாகாண சபை உறுப்பினர்களின் குறித்தொதுக்கப்பட்ட நிதிக்கு வழங்குவதற்காக ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது.

மிகுதி நிதியான 40.5 மில்லியன் ரூபாவை வடமாகாண சபை கட்டிடத்தின் மேலதிக வேலைகளுக்காக திறைசேரியில் இருந்து பெற்று தரும்படி மத்திய அரசிடம் இருந்து கோரியுள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன், அண்மையில் யாழ்ப்பாணம் விஜயம் செய்த நிதி அமைச்சின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர வடமாகாண சபை கட்டிடத்தை பார்வையிட்டார்.

இதன்போது, வடமாகாண சபை கட்டிட தொகுதியை விருத்தி செய்வதற்கு மேலும் 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தருவதாக உறுதியளித்தார்.

மேலும், மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கின்ற பலநோக்கு கூட்டுறவு சங்கங்களில் கட்டிடங்களை அமைப்பதற்கும் நிதியை அவரிடம் கோரியிருந்தோம். அதற்கும் நிதி ஒதுக்கீடு செய்து தருவதாக அவர் உறுதியளித்ததாக சிவஞானம் மேலும் தெரிவித்தார்.

Related Posts