வடமாகாண சபை ஒரு வைக்கோல் பட்டடை நாய் ; குற்றம் சாட்டுகிறார் மகிந்த

வடமாகாண சபை வைக்கோல் பட்டடை நாய் போல செயற்படுகின்றதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

mahintha

கொடிய பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து உங்களை மீட்டெடுத்து இன்று நிம்மதியாக வாழவைத்திருக்கிறோம்.

30 வருடங்களாக நீங்கள் அனுபவித்த கஷ்டங்கள் நீங்கி இப்போது நீங்கள் நிம்மதியாக வாழ்கிறீர்கள். இதுவே எங்கள் எதிர்பார்ப்பு. நிச்சயமாக நாம் உங்களுக்கு உதவுவோம். நீங்கள் எப்போதும் எங்களை நம்பலாம். அதுபோல நாங்கள் உங்களை நம்புகிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ.

வடமாகாணத்தைச் சேர்ந்த 20 ஆயிரம் போருக்கு காணி உறுதி வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.50 மணியளவில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு சிங்களத்திலும் தமிழிலும் உரையாற்றினார். இதன்போது அவர் தெரிவித்தவை வருமாறு:-

பயங்கரவாதிகளுக்கும் பயங்கர ஆயுதங்களுக்கும் எதிராகவே நாம் போராட்டம் நடத்தினோம். உங்களுடைய எதிர்காலத்துக்காகவும் உங்களுடைய பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காகவுமே நாம் போராட்டம் நடத்தினோம்.

2009 மே 19ஆம் திகதி பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதன் பின்னர் நீங்கள் விமோசனம் பெற்றுள்ளீர்கள். உங்களுடைய பிரச்சினைகள், எதிர்பார்ப்புக்கள் என்ன என்பது எங்களுக்குத் தெரியும். கடந்த காலங்களில் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் முடங்கியிருந்த நீங்கள், இப்போது அதிலிருந்து மீண்டுள்ளீர்கள். போர்காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள், சொத்திழப்புக்கள் காரணமாக நீங்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்துள்ளீர்கள். இப்போது அந்த ஆபத்து இல்லை.

வடபகுதியை அபிவிருத்தி செய்ய நாம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். வடமாகாண சபை வைக்கோல் பட்டடை நாய் போல செயற்படுகின்றது. எமது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை. நாம் அழைப்பு விடுத்திருந்தும் அவர்கள் இந்த நிகழ்வுக்கு சமுகமளிக்கவில்லை.

பயங்கரவாதிகள் உங்கள் வாழ்விடங்களில் புதைத்த கண்ணிவெடிகளை அகற்றி மீள்குடியேற்றத்துக்கு வழிசெய்தோம், பாழடைந்துபோன வீதிகளைப் புனரமைத்து போக்குவரத்தை இலகுபடுத்தினோம். படையினர் வசமிருந்த பல காணிகளை விடுவித்து சொந்த மக்களிடம் கையளித்தோம் யுத்தத்தின்போது சரணடைந்த புலி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கி அவர்களைப் புனர்வாழ்வுக்குட்படுத்தி சமூகத்துடன் இணைத்துள்ளோம்.

இப்போது உங்கள் காணிகளுக்கு உறுதிப்பத்திரங்களை வழங்குகிறோம். கிளிநொச்சி மாவட்டத்தை புதிய நிர்வாக நகரமாக மாற்றி அபிவிருத்தி செய்துவருகிறோம். அபிவிருத்தி வேறு அரசியல் வேறு. அதை நீங்கள் உணருவீர்கள். அரசியல் மட்டும் செய்து மக்களை, அவர்களது எதிர்பார்ப்புக்களை திருப்திப்படுத்தமுடியாது. மக்கள் சேவையே மகேசன் சேவை. இதன்மூலம் தான் நாட்டை எல்லா வழிகளிலும் அபிவிருத்தி செய்யமுடியும். நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றுபட்டு வாழ்வோம்.- என்றார்.

Related Posts